சீனத் தடுப்பூசிகள் செயற்திறனற்றவை என்று மேற்குலக ஊடகங்கள் அவற்றின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக உண்மையைத் திரித்துக்கூறி வருகின்றன - கடுமையாகச் சாடியுள்ள சீனத் தூதரகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 1, 2021

சீனத் தடுப்பூசிகள் செயற்திறனற்றவை என்று மேற்குலக ஊடகங்கள் அவற்றின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக உண்மையைத் திரித்துக்கூறி வருகின்றன - கடுமையாகச் சாடியுள்ள சீனத் தூதரகம்

(நா.தனுஜா)

சீனத் தடுப்பூசிகளான சினோபாம் மற்றும் சினோவெக்ஸ் ஆகியவை தற்போது பரவி வரும் திரிபடைந்த டெல்டா வைரஸிற்கு எதிராக செயற்திறனான வகையில் இயங்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன. எனினும் சீனத் தடுப்பூசிகள் செயற்திறனற்றவை என்று மேற்குலக ஊடகங்கள் அவற்றின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக உண்மையைத் திரித்துக்கூறி வருகின்றன என்று சீனத் தூதரகம் கடுமையாகச் சாடியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சீனாவினால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் வெவ்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

அண்மைக் காலத்தில் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் கொவிட்-19 வைரஸின் திரிபடைந்த டெல்டா வைரஸ் அடையாளங்காணப்பட்டிருக்கிறது. சீன தடுப்பூசிகளான சினோபாம் மற்றும் சினோவெக்ஸ் ஆகியவை டெல்டா வைரஸ் பரவலின் தீவிரத்தன்மையைக் கட்டுப்படுத்துவதற்கான வீரியத்தைக் குறைந்த அளவிலேயே கொண்டிருப்பதாக சில ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், சீன தடுப்பூசி தொடர்பில் ஜகார்த்தா குளோப் என்ற ஆங்கில ஊடகத்தில் நேர்மறையான செய்தியொன்று வெளியாகியுள்ளது. 

ஜகார்த்தாவில் அண்மைக் காலத்தில் திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவல் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த குடூஸ், மத்திய ஜாவா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருமளவான சுகாதாரப் பணியாளர்களுக்கு சினோவெக்ஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தது. 

அந்தத் தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில் பலர் குணமடைந்திருப்பதுடன் கொவிட்-19 வைரஸின் மிக மோசமான திரிபிற்கு எதிராக சீனத் தடுப்பூசி வினைத்திறனான வகையில் செயற்படுவது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியையும் சீனத் தடுப்பூசிகள் தொடர்பில் நேர்மறையான விதத்தில் வெளியாகியிருக்கும் வேறு சில செய்திகளையும் மேற்கோள்காட்டி இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

சினோபாம் மற்றும் சினோவெக்ஸ் ஆகிய தடுப்பூசிகள் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயற்திறனான வகையில் இயங்கக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதுடன் இந்தோனேசியாவில் சுகாதாரப் பணியாளர்கள் பலரின் உயிரையும் காப்பாற்றியிருக்கிறது என்று அப்பதிவில் சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி இஸ்ரேலில் 80 சதவீதமான மக்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையிலும்கூட அங்கு புதிய கொரோனா வைரஸ் பரவல் அலை உருவாகியுள்ளது. 

அதேபோன்று பிரித்தானியாவில் அண்மைக் காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களில் அரைவாசிப்பேர் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களாவர். 

எனினும் இவையனைத்தையும் புறக்கணித்துவிட்டு, மேற்குலக ஊடகங்கள் தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காக வெட்கமின்றி உண்மையைத் திரித்துக் கூறுகின்றன என்றும் சீனத் தூதரகம் சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment