புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலார்களுக்கு நட்டஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் தன்னுடைய செயற்பாடுகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய புயல் காற்றின் காரணமாக வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்குச் சொந்தமான பல கோடி பெறுமதியான தொழில் உபகரணங்கள் அழிவடைந்துள்ளன. அவை தொர்பான முழுமையான மதிப்பீட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அமைச்சரவைபத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அம்பன் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விசேட அமைச்சரவைபத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு பல மில்லியன் ரூபாய்களை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடாக பெற்றுக் கொடுத்துள்ளோம். அதேபோன்று புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரங்களும் பெற்றுக் கொடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், தூற்றுவார் தூற்றட்டும் புழுதி வாரிப் பூசுவார் பூசட்டும், மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சிகனைகளை தீர்த்து வைக்கும் செயற்பாடுகள் தொடரும் என்று தெரிவித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது அரசியல் செயற்பாடுகளின் அவசியத்தினையும் நியாயத்தினையும் கடந்த காலங்களில் மக்கள் புரிந்து கொண்டதைப்போன்று எதிர்காலத்திலும் புரிந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment