(இராஜதுரை ஹஷான்)
தேசிய மட்டத்திலான சேதனப்பசளை உற்பத்தி செயற்திட்டம் தோல்வியடைந்தால் அது உலகளாவிய மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். ஜேர்மனி, சுவிசர்லாந்து உள்ளிட்ட எட்டு ஐரோப்பிய நாடுகள் சேதனப்பசளை உற்பத்திக்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோதெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்கால நலனை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இத்தீர்மானத்தை உலக உணவு ஸ்தாபனம் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் வரவேற்றுள்ளன. இரசாயன உர பாவனையால் ஏற்படும் பாதிப்புக்களை முழுமையாக இல்லாதொழிப்பதே இத்தீர்மானத்தின் பிரதான இலக்காகும்.
தேசிய மட்டத்தில் சேதனப்பசளை உற்பத்திக்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜேர்மனி, சுவிஷ்லாந்து உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் சேதனப்பசளை உற்பத்திக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தின்போது குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மட்டத்தில் சேதனப்பசளையை உற்பத்தி செய்யும் செயற்திட்டம் தோல்வியடைந்தால் அது உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும். சேதனப்பசளை உற்பத்தியின் முக்கியத்துவத்தை பிற நாடுகள் மத்தியில் முன்னெடுத்து செல்ல முடியாத நிலை ஏற்படும்.
சிறந்த தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி, சேதனப்பசளை உற்பத்தி தொடர்பான தீர்மானத்தை எடுத்தார். இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த தலைவர்கள் இவ்வாறான தீர்மானத்தை எடுக்கவில்லை. சேதனப்பசளை மற்றும், தற்போது ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாடு குறித்து எதிர்தரப்பினர் தவறான பிரசாரங்களை மக்கள் மத்தியில் முன்னெடுக்கிறார்கள். நாட்டு மக்கள் அனைவரின் ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டே அரசாங்கம் இரசாயன உர பாவனையை தடை செய்துள்ளது.
இரசாயன உரப்பாவனையை தடை செய்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளது. எக்காரணிகளுக்காகவும் சேதனப்பசளை உற்பத்தி தொடர்பான தீர்மானம் கைவிடப்படாது. என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம்.
விவசாயிகளுக்கு பெரும் போகத்திற்கு தேவையான சேதனப்பசளை உரம் தாராளமாக வழங்கப்படும். சிறுபோக விளைச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment