வெகுவிரைவில் ராஜபக்ஷாக்களுக்கு எதிரான அரசியல் சூறாவளியாக மாற்றமடையும், அவர்கள் நாட்டுக்கு சாபம் - சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Friday, July 2, 2021

வெகுவிரைவில் ராஜபக்ஷாக்களுக்கு எதிரான அரசியல் சூறாவளியாக மாற்றமடையும், அவர்கள் நாட்டுக்கு சாபம் - சம்பிக்க ரணவக்க

(எம்.மனோசித்ரா)

ராஜபக்ஷாக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில் சகல திசைகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. அவை வெகுவிரைவில் ராஜபக்ஷாக்களுக்கு எதிரான அரசியல் சூறாவளியாக மாற்றமடையும். அதற்கு தலைமை தாங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பஷில் ராஜபக்ஷவுக்கு எந்த அமைச்சு பதவியை வழங்கினாலும் அவரால் எதனையும் செய்ய முடியாது என்பது மூன்று மாதங்களிலேயே வெளிப்படும். ராஜபக்ஷாக்கள் நாட்டுக்கு சாபமாகும் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் கொவிட் ஒழிப்பு செயற்பாடுகள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை முகாமைத்துவம் செய்ய முடியாத ராஜபக்ஷாக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். இதன் காரணமாக அரசியல் எதிர்ப்பு புயலொன்று அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

அன்று மஹிந்த காற்றைப் பற்றி கூறினார்கள். இன்று ராஜபக்ஷாக்கள் இனி வேண்டாம் என்று கூறி மக்களின் எதிர்காற்று ஆரம்பமாகியுள்ளது. சகல துறைகளிலும் ராஜபக்ஷாக்களுக்கு வாக்களித்தவர்கள் இன்று அவர்களது செயற்பாடுகளில் அதிருப்தியடைந்து அவர்களுக்கு எதிரான எதிர்ப்புகாற்றுடன் ஒன்றிணைந்துள்ளனர்.

நாட்டில் தொழில் புரியும் பிரஜைகள் 80 இலட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 14 - 26 இலட்சத்திற்க இடைப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் உள்ளனர். 40 இலட்சம் பேர் சுயதொழிலில் ஈடுபடுபவர்களாவர். இந்த 40 இலட்சம் மக்களும் இன்று புதிய பாவப்பட்ட ஏழை குழுவினராகியுள்ளனர். இலங்கையின் வறுமை நிலையை 6 வீதம் வரை குறைப்பதற்கு எம்மால் முடிந்தது. ஆனால் முறையற்ற கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கடந்த ஏப்ரலில் தாய் நாடான அமெரிக்காவிற்கு சென்றிருந்த பஷில் ராஜபக்ஷ தற்போது சுற்று பிரயாணமாக நாடு திரும்பியுள்ளார். அவர் தாய் நாடு செல்ல முன்னர் இலங்கையில் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராகக் காணப்பட்டார். ஆனால் எவ்வித நிதி முகாமைத்துவமும் இன்றி நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடிக்கு பஷில் ராஜபக்ஷ நிச்சயம் பொறுப்பு கூற வேண்டும்.

எனவே தற்போது அவருக்கு நிதி அமைச்சு மாத்திரமல்ல, எந்த அமைச்சை வழங்கினாலும் அவரால் எதையும் செய்ய முடியாது. அமைச்சு பதவியை வழங்கி 3 மாதங்களுக்குள் அதனை கண்டுகொள்ளலாம். பஷில் மாத்திரமல்ல. எந்தவொரு ராஜபக்ஷவுக்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று நாம் ஏற்கனவே கூறினோம்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது யுத்த வெற்றியை பெரிதாக பிரசாரம் செய்து அவர் அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து விடுவார் என்று கூறினார்கள். அவரின் தோல்வியை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷவே அவரின் பின்னாலிருந்து யுத்தத்தை நிறைவு செய்ததாக கூறினார்கள். தற்போது அவரும் தோல்வியடைந்துள்ளதால் பஷில் ராஜபக்ஷவைக் கூறுகின்றனர். எதிர்வரும் 3 வருடங்களில் நாமல் ராஜபக்ஷதான் தேர்தல் வெற்றிக்கு காரணம் என்று கூறுவார்கள்.

ஆனால் எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டை மேம்படுத்த முடியாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். ராஜபக்ஷாக்கள் நாட்டுக்கு சாபம் ஆவர். அதனால்தான் அவர்களுக்கு எதிராக நாட்டின் சகல திசைகளிலிருந்தும் எதிர்ப்புகாற்று உருவாகிக் கொண்டிருக்கிறது. இவை ஒன்றிணைந்து மக்கள் மத்தியில் பாரிய சூறாவளியாக மாற்றமடையும். ராஜபக்ஷாக்களுக்கு எதிரான இந்த அரசியல் சூறாவளிக்கு தலைமை வகிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். கோட்டாபய ராஜபக்ஷவை தொடர்ந்தும் யார் நாட்டின் தலைவர் என்பதை மக்கள் தீர்மானிப்பர் என்றார்.

No comments:

Post a Comment