9 பதக்கங்களுடன் இலங்கை வந்த மெய்வல்லுநர் வீரர்களுக்கு காத்திருந்த துயரம் : ஒழுக்க விதிகளை மீறியவர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, July 2, 2021

9 பதக்கங்களுடன் இலங்கை வந்த மெய்வல்லுநர் வீரர்களுக்கு காத்திருந்த துயரம் : ஒழுக்க விதிகளை மீறியவர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைப்பு

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பதக்கம் வென்று கொடுத்து தாய் நாட்டுக்கு பெருமை தேடித்தந்த மெய்வல்லுநர் வீர, வீராங்க‍னைகள் ஆரம்பத்தில் கொழும்பு சுகதாச ஹோட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்திருந்தபோதும், கடைசி நேர தீர்மானத்தின்படி அவர்கள் தற்போது மாத்தறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கும் விடயமாகும்.

60 ஆவது இந்திய மாநிலங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் ஒரு தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்ற இலங்கை மெய்வல்லுநர் குழாம் நேற்றையதினம் தாய்நாட்டுக்குத் திரும்பினர்.

'பயோ பபள்' சுகாதார வழிமுறைக்காக கொழும்பு சுகததாச ஹோட்டலில் தங்க வைக்கப்படுவர் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அவர்கள் மாத்தறையில் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் 'பயோ பபள்' சுகாதார வழிமுறையை கடைப்பிடிக்க வேண்டிய துரதிஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒழுக்க விதிகளை மீறிய சில கிரிக்கெட் வீரர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு பயோ பபள் சுகாதார வழிமுறைகளை உட்படுத்தபட்டுள்ள போதிலும், பதக்கம் வென்று தாய்நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்தவர்களுக்கு போதிய வசதிகளை வழங்காமை குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவி த்து வருகின்றனர்.
இதேவேளை, 60 ஆவது இந்திய மாநிலங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் இந்தியாவின் அழைப்பின் பேரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த வீர, வீராங்கனைகள் நேரடியாக இந்தியாவுக்கு செல்லவில்லை.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு நேரடி விமானப் பயணங்கள் இல்லாததன் காரணமாக, அவர்கள் இலங்கையிலிருந்து கட்டாருக்கு கடந்த மாதம் 23 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு பயணமாகினர்.

அங்கு விமான நிலைய இருக்கைகளிலும் தரைகளில் தூங்கிவிட்டு, அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவின் டெல்லிக்கு மறுநாள் (24) முற்பகல் 11.30 மணிக்கு வந்தடைந்தனர்.

பிறகு மீண்டும் விமானம் மூலமாக சண்டிகாருக்கு 12.30 க்கு வந்தடைந்ததுடன், பிற்பகல் 3 மணியளவில் பத்தியாலாவிலுள்ள தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹோட்டல் விடுதிக்கு வந்துள்ளனர்.

2 மணித்தியாலங்களுக்குள் சென்றடைய வேண்டிய தூரத்துக்கு 30 மணித்தியாலங்களை செலவிட்டு, போட்டிக்கு முந்தையநாள் (24 ஆம் திகதி) பிற்பகல் வேளையிலேயே போட்டி நடைபெறும் பத்தியாலாவுக்கு சென்றுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே அவர்கள் தாய்நாட்டுக்கு பெருமை தேடித்தரும் விதமாக 9 பதக்கங்களை வென்றுக் கொடுத்துள்ளனர்.

இதேவேளை, 67 மில்லியன் ரூபா செலவில் தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாட அனுப்பி வைத்த கிரிக்கெட் வீரர்கள் மூவர், அங்கு இரவு நேரங்களில் சுற்றித் திரிந்துள்ளனர்.

அவ்வாறு, சுகாதார விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், தற்போது தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டும் உள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மாத்தறையில் தங்க வைக்கப்பட்டுள்ள ‍இலங்கை மெய்வல்லுநர் குழாத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீராங்கனை ஒருவரும் காணப்படுகிறார்.

இவ்வாறிருக்கையில், தாய் நாட்டை பெருமைப்படுத்துபவர்களுக்கும், தாய் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தவர்களுக்கும் நாட்டில் இருவேறு நிலைப்பாடு காணப்படுவது வேதனையளிப்பதாக விளையாட்டு அபிமானிகள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment