லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வருகை தரும் வசதி படைத்த மற்றொரு ராஜபக்ஷ மாத்திரம் நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப்போடக் கூடிய மாயாஜாலத்தை அறிந்திருப்பார் என்று நான் கருதவில்லை - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Friday, July 2, 2021

லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வருகை தரும் வசதி படைத்த மற்றொரு ராஜபக்ஷ மாத்திரம் நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப்போடக் கூடிய மாயாஜாலத்தை அறிந்திருப்பார் என்று நான் கருதவில்லை - ஹர்ஷ டி சில்வா

(நா.தனுஜா)

லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வருகை தரும் வசதி படைத்த மற்றொரு ராஜபக்ஷ மாத்திரம் நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப்போடக் கூடிய மாயாஜாலத்தை அறிந்திருப்பார் என்று நான் கருதவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஹர்ஷ டி சில்வா அவரது டுவிட்டர் பக்கத்தில் காணொளியொன்றை பதிவேற்றம் செய்து அதில் மேலும் கூறியிருப்பதாவது அண்மையில் இலங்கை மத்திய வங்கியானது தமது சர்வதேச முறிகளையும் அபிவிருத்தி முறிகளையும் கொள்வனவு செய்ய வேண்டும் என்று ஏனைய வங்கிகளைக் கட்டாயப்படுத்தியது. அதன் பின்னர் அவ்வாறு கொள்வனவு செய்யத் தேவையில்லை என்று கூறியது. பின்னர் மீண்டும் கொள்வனவு செய்ய வேண்டும் என்றது.

இவ்வாறு மத்திய வங்கி அதன் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தது. நாடு மிகுந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதையும் கடன்களை மீளச் செலுத்துவதற்கான நிதியை வெளியிலிருந்து திரட்டிக் கொள்வது கடினம் என்பதையும் மத்திய வங்கி நன்கு புரிந்துகொண்டமையே அதற்குக் காரணமாகும்.

டொலரில் அறவிடப்படுகின்ற பாரியளவு கடனை மீளச் செலுத்த வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கின்றது. எனினும் அதனை மீளச் செலுத்தும் ஆற்றல் அரசாங்கத்திற்கு இருக்கின்றதா? என்பதே தற்போதைய பிரச்சினையாகும்.

தம்மிடம் போதியளவு நிதி டொலர்களில் இருப்பதாக அரசாங்கம் கூறினாலும், உண்மையில் கடனை மீளச் செலுத்துவதற்கான நிதியைத் திரட்டுவதில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்து அரசாங்கம் அச்சமடைந்திருக்கிறது. அண்மையில் செலுத்த வேண்டியிருந்த 180 மில்லியன் டொலர் நிதியில் 100 மில்லியன் டொலர் நிதியைக்கூட ஒரு வார காலத்திற்குள் அரசாங்கத்தினால் திரட்டிக் கொள்ள முடியாமல்போனது.

ஒரு வாரத்தில் வெறுமனே 34 மில்லியன் டொலர் நிதியையே அரசாங்கம் திரட்டியது. எனவே அந்தக் கடன்களை மீளச் செலுத்துவதற்கு சேமிப்பில் இருந்த நிதியே பயன்படுத்தப்பட்டிருக்கும். அதன் காரணமாகவே அண்மையில் பெருமளவான நிதி அரசாங்கத்தினால் புதிதாக அச்சிடப்பட்டது. இது ஓர் குறுகியகால நடவடிக்கையாக அமைந்தாலும், பொருளாதார நெருக்கடிக்கான நீண்டகால அடிப்படையிலான தீர்வாக அமையாது.

அதேபோன்று பொருளாதாரத்தைக் கையாள்வதற்குப் பொறுப்பாக எந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் என்பது குறித்து கருத்திற்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இவ்விடயத்தில் ராஜபக்ஷாக்களால் எதனையும் செய்ய முடியாது. மாறாக நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பைப் புரிந்துகொள்வதும் நாடு இப்போது பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதுமே தற்போது செய்ய வேண்டியவையாகும்.

எமது நாட்டிற்கு என்ன நடந்தது? நாட்டின் பொருளாதாரத்தைப் புரிந்துகொண்டு, அதனைச் சீரமைக்கக் கூடிய எவரும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெளியில் இல்லையா? 2005 ஆம் ஆண்டிலிருந்து அதற்காக தெரிவு செய்யப்படுபவர் ராஜபக்ஷவாகத்தான் இருக்க வேண்டுமா? அவர்கள் கடந்த காலத்தில் பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்திருந்தால், தற்போது நாம் இத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டிருக்காது.

எனவே இதற்குத் தீர்வை வழங்க முடியாத நிலையிலேயே தற்போது ராஜபக்ஷாக்களும் இருக்கின்றார்கள். அவ்வாறிருக்கையில் லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வருகை தரும் வசதி படைந்த மற்றொரு ராஜபக்ஷ மாத்திரம் நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப்போடக்கூடிய மயாஜாலம் எதனையும் அறிந்திருப்பார் என்று நான் கருதவில்லை.

தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதே இதற்குச் சிறந்த தீர்வாக அமையும். நாட்டில் இடம்பெறும் முதலீடுகளைக் கண்காணித்தல் மற்றும் அவற்றை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றைச் செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தில் உதவி இன்றியமையாததாகும்.

அதுமாத்திரமன்றி எமது நாடு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படும்போது, பொருளாதாரத்தை மீட்பதற்கும் கடன்களை மீளச் செலுத்துவதற்கும் இலங்கையிடம் முறையான செயற்திட்டமொன்று உள்ளது என்று முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.

இவை மாத்திரமன்றி இலங்கை சர்வதேச சமூகத்துடன் இணைய வேண்டும். தற்போது எமது நாடு அனைத்திலிருந்தும் விலகி தனித்துச் செயற்படுகின்றது. சர்வதேச மற்றும் பிராந்தியக் கூட்டமைப்புக்களில் இருந்து இலங்கை விலகியிருக்கிறது. எனவே அவற்றுடன் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயலாற்றுவதும் மிகவும் அவசியமாகும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment