(எம்.மனோசித்ரா)
கடுமையான சட்டங்கள் ஊடாக நாட்டை ஹிட்லர் மற்றும் முசோலினியின் ஆட்சியைப் போல் முன்னெடுக்கவே தற்போதைய ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் முயற்சிக்கின்றது. எனவே பயங்கரவாத தடைச் சட்டம் போன்றவை நீக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் குறுகிய நோக்கங்களுக்காக செயற்படுவதைத் தவிர்த்து ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்ட கட்டமைப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதற்காக சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜூன் 18 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ, அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் அலி சப்ரி ஆகியோரால் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான கூட்டு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இது தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
இலங்கையில் சிவில் உரிமைகள் மீறப்படல், பயங்கரவாத தடைச் சட்டம் அரசாங்கத்தால் முறைகேடாக பயன்படுத்தப்படல் என்வற்றை மேற்கோள் காட்டி இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நீக்குவதற்கான யோசனை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னரே இவர்களுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தோன்றியுள்ளது.
இராணுவமயமாக்கல் , 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நீதித்துறை பலவீனப்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளையே இலங்கைக்கு எதிராக இவ்வாறானதொரு சட்டம் நிறைவேற்றப்படக் காரணமாகும்.
தமது குறுகிய நோக்கங்களுக்காக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் கைது செய்யப்பட்ட விவகாரமும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாட்டின் பிரஜையொருவர் சிந்தித்தால் கூட அவருக்கு தண்டனை வழங்கப்படக்கூடிய நிலைமையை தோற்றுவித்துள்ளது. ஹிட்லர் ஆட்சியிலேயே இவ்வாறான கடும் சட்டங்கள் காணப்பட்டன.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக்கூறி ஆட்சியை கைப்பற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யுத்தத்ததின் போது இல்லாத சட்டங்களைக்கூட தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றார்.
இலங்கையின் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்திலிருப்பது ஐரோப்பிய நாடுகள் ஆகும். அவ்வாறான நிலையில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தற்காலிகமாக நீக்கப்பட்டால்கூட அது எமது பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டது முதல் அரசியல் கைதிகள் விடுதலை வரை சகல விடயங்களிலும் சர்வதேச அழுத்தமே தாக்கம் செலுத்துகின்றது. தவறான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கம் அவை தொடர்பில் சர்வதேச அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட பின்னரே அந்த தீர்மானங்களை மாற்றிக் கொள்கிறது. அவ்வாறெனில் சகல விடயங்களுக்கும் சர்வதேசத்தின் பின்னால் செல்ல வேண்டும் என்றா ராஜபக்ஷாக்கள் கூறுகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி அதிகூடிய அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொண்ட அரசியல்வாதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆவார். ஆனால் அதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு இதுவரையில் அவர் எடுத்துள்ள புதிய முயற்சிகள் என்ன?
தாக்குதல் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ளமையால் பேராயர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த அமர்வின் போது ரிஷாத் பதியுதீன் தொடர்பில் கேள்வி எழுப்பிய பின்னர்தான் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்படுமா? இவ்வாறு அரசியல் தேவைகளுக்காக தண்டனை வழங்கும் செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
மக்கள் குரலை முடக்குவதற்கான அடக்குமுறை சட்டங்கள் நாட்டுக்கு அவசியமற்றவை. எனவே புதிய பயங்கரவாத தடைச் சட்டம் தேவையற்றது. திருத்தங்களுடன் புதிய பயங்கரவாத தடைச் சட்டம் உருவாக்கப்படுமானால் அது அரசாங்கத்திற்கு தேவையான வகையிலேயே அமையப்பெறும்.
இவ்வாறான சட்டங்களுடன் ராஜபக்ஷாக்களின் ஆட்சி தொடருமானால் ஹிட்லரும் முசோலினியும் சேர்ந்து ஆட்சி முன்னெடுப்பதைப் போன்று சர்வாதிகார ஆட்சியே நாட்டில் இடம்பெறும்.
எனவே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுவதையும் தவிர்த்து நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும். இவற்றுக்கு சர்வதே அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment