ஏகாதிபத்தியம் மேலோங்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அதனை மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள் என்பதே வரலாறு எமக்குச் சொல்லும் பாடம் - கரு ஜயசூரிய - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

ஏகாதிபத்தியம் மேலோங்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அதனை மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள் என்பதே வரலாறு எமக்குச் சொல்லும் பாடம் - கரு ஜயசூரிய

(நா.தனுஜா)

அரசாங்கமானது தமது தவறுகளைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, அது குறித்து மக்கள் பேசுவதைத் தடுப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றது என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் சபாநாயகரும், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய, ஏகாதிபத்தியம் மேலோங்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், அதனை மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள் என்பதே வரலாறு எமக்குச் சொல்லும் பாடமாகும் என்றும் எச்சரித்திருக்கின்றார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் தடை செய்யப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாக, மேற்படி செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்படுவதாகக் கடந்த செவ்வாய்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமையிலிருந்து பலதரப்பட்ட கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காகப் போராடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் பொலிஸாரால் தீவிரப்படுத்தப்பட்டன.

குறிப்பாக ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்திற்கு எதிராகக் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலரை பொலிஸார் தூக்கிச் சென்று பொலிஸ் வண்டிகளில் ஏற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டதுடன் இச்சம்பவம் பல்வேறு சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்தது.

இந்நிலையில் இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே கரு ஜயசூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு தொடர்பில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை அரசாங்கம் மிகவும் மோசமான வகையில் மீறுகின்றது.

அரசாங்கமானது தமது தவறுகளைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, அது குறித்து மக்கள் பேசுவதைத் தடுப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றது.

ஏகாதிபத்தியம் மேலோங்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், அதனை மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள் என்பதே வரலாறு எமக்குச் சொல்லும் பாடமாகும்.

அரசாங்கம் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகக் கூறியபோது, அவர்கள் பௌத்த பிக்குகளை நிலத்திலிருந்து இழுத்துச் செல்வார்கள் என்று யாரும் நினைக்கவில்லை.

வயது முதிர்ந்தவர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் மிகவும் மோசமான விதத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தின் மிகவும் மோசமான மறுபக்கம் தற்போது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியிருக்கின்றது என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad