தாதியர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு வழங்காவிடின் 7 ஆம் திகதி முதல் நிபந்தனையற்ற பணி புறக்கணிப்பு - முருந்தெட்டுவே ஆனந்த தேரர் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 1, 2021

தாதியர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு வழங்காவிடின் 7 ஆம் திகதி முதல் நிபந்தனையற்ற பணி புறக்கணிப்பு - முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

நாடு தமுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டமைக்கு சுகாதார அமைச்சு பொறுப்பு கூற வேண்டும். தாதியர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு வழங்காவிடின் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் நிபந்தனையற்ற பணி புறக்கணிப்பில் தாதியர்கள் ஈடுபடுவார்கள் என பொதுச்சேவை தாதியர் பிரிவு சங்கத்தின் தலைவர் அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தாதியர்கள் கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் நெருக்கடியான சூழ்நிலையில் சேவையில் ஈடுபடுகிறார்கள். தாதியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சுகாதார அமைச்சருடனும், சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடனும் இதுவரையில் 11 பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 14 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைiமையில் பேச்சுவார்த்தை இடம் பெற்றது.

தாதியர்களின் பற்றாக்குறை குறித்து இப்பேச்சுவார்த்தையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணுமாறு பிரதமர் சுகாதார அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

விரைவில் தீர்வு வழங்குவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராட்சி அன்று பிரதமர் முன்னிலையில் வாக்குறுதி வழங்கினார். அவரது வாக்குறுதி வெறும் பேச்சளவில் மாத்திரமே காணப்படுகிறது.

கொவிட் வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் சேவையில் ஈடுபடும் தாதியர்களின் சுகாதார பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறும் கோரிக்கையை முன்வைத்து தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.

தாதியர்களின கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்காவிடின் எதிர்வரும் 7 ஆம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் தாதியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள். இப்போராட்டம் அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். பிரதமர் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார். ஏனையோர் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment