(இராஜதுரை ஹஷான்)
கூட்டணிக்குள் காணப்படும் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சி இம்முறை வெற்றி பெறாது என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பல்வேறு கொள்கைகயை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை ஒன்றினைத்து ஆட்சியமைக்கும் போது பல முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பு.
முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரும் கூட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதனை விடுத்து கூட்டணியையும், அரசாங்கத்தையும் பலவீனப்படுத்தும் வகையில் செயற்பட்டால் அது எதிர்தரப்பினருக்கு சாதகமாக அமையும்.
அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாட்டை ஒரு தரப்பினர் தற்போது முன்னெடுத்துள்ளார்கள். 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சி இம்முறை வெற்றி பெறாது. கொவிட் வைரஸ் தாக்கம் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
கூட்டணிக்குள் காணப்படும் உள்ளக பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். இந்த பிரச்சினையினை கொண்டு எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் பதவியில் வெகு விரைவில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment