ஆமைகள், டொல்பின்கள், திமிங்கலங்கள் என 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு - சிலர் கூறுவதைப் போன்று, பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமல்ல : வழக்கை ஜூலை 13 க்கு ஒத்தி வைத்தார் நீதிவான் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 1, 2021

ஆமைகள், டொல்பின்கள், திமிங்கலங்கள் என 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு - சிலர் கூறுவதைப் போன்று, பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமல்ல : வழக்கை ஜூலை 13 க்கு ஒத்தி வைத்தார் நீதிவான்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த தீ பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பல், சுமார் 10 கடல் மைல் தூரத்தில் 70 அடி (21 மீற்றர்) ஆழத்தில் கடலில் மூழ்கியுள்ள நிலையில், அக்கப்பலின் இரசாயன தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக நீதிமன்றுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.

அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன், இதனை கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரமவுக்கு நேற்று அறிவித்தார். 

அதன்படி 176 கடலாமைகள், 20 டொல்பின் மீன்கள், 4 திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக, வன ஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களம் அரிக்கை அலித்துள்ளதாகவும் அதனை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

'இந்த கப்பல் விவகாரத்தில் வன ஜீவிகள், தாவர்ன்ஹ்கள் கட்டளைச் சட்டத்தின் கீழும் விசாரணை இடம் பெறுவதாக முதல் பீ அறிக்கையில் நாம் தெரிவித்திருந்தோம். அதற்கான அரிக்கைகளை சி.ஐ.டி.யினர் வனஜீவிகள் திணைக்களத்திடமிருந்து பெற்றுள்ளனர். அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியமை தொடர்பில் 26 நீதிமன்றங்களில் விடயங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 176 கடலாமைகள், 4 திமிங்கிலங்கள் மற்றும் 20 டொல்பின் மீன்கள் இறந்து நேற்று மாலை வரை கரை ஒதுங்கியுள்ளன. இதற்கு குறித்த கப்பலுடன் தொடர்புடைய சம்பவங்களே நேரடி காரணம் என உறுதியாகியுள்ளது.

சிலர் கூறுவதைப் போன்று, பருவப் பெயர்ச்சி நிலைமை இறப்புக்கான காரணமல்ல.' என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் குறிப்பிட்டார்.

அத்துடன் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் 39 விஷேட நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இந்த விடயம் தொடர்பில் விசாரிப்பதாகவும், கடல் வாழ் உயிரினங்களின் உயிரிழப்புக்கு கப்பல் சம்பவமே நேரடி காரணம் என அதில் தெரியவந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய மாதவ தென்னகோன், அவசியம் ஏற்படின் சி.ஐ.டி.யினர் அது தொடர்பில் இரசயான பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற நீதிமன்றை நாடுவர் என தெரிவித்தார்.

தீயில் எரிந்து மூழ்கிய கப்பல் விவகாரம் தொடர்பிலான முறைப்பாடு மீதான விசாரணைகள் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதானமாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு இந்த விவகாரத்தில் விசாரணைகள் இடம்பெரும் நிலையில், அச்சட்டத்தின் 12 ஆம் அத்தியாயம் பிரகாரம் நீதிமன்ற அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கே உள்ள நிலையில், குற்ற விசாரணைகளுக்கு உதவும் விதமாக குற்றவியல் சட்டத்தின் 124 ஆவது அத்தியாயம் பிரகாரம், விசாரணைகளுக்கான உத்தரவுகளை வழங்குதல் மற்றும் விசாரணைகளை மேற்பார்வைச் செய்யும் நடவடிக்கைகளுக்காக இவ்வழக்கு நேற்று இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நேற்று குறித்த விவகாரம் விசாரணைக்கு வந்த போது, விசாரணையாளர்களான சி.ஐ.டி. சார்பில், கப்பல் விசாரணைகளுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் அபேசிங்க, சி.ஐ.டி.யின் சமுத்திர விவகார பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக பொலிஸ் பரிசோதகர் குமாரசிறி உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர். அவர்களுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னக்கோன் தலைமையில், சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம, சிரேஷ்ட அரசசட்டவாதி பஸ்லி ராஸிக், அரச சட்டவாதி மாலிக் அஸீஸ் உள்ளிட்ட குழுவினர் பிரசன்னமாகினர்.

இந்நிலையில் கப்பல் கெப்டன், பிரதான பொறியியலாளரான சீன பிரஜை, உதவி பொறியியலாளரான இந்திய பிரஜை உள்ளிட்டோரின் உரிமைகள் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விபுல விமலசேன தலைமையிலான குழுவினர் ஆஜராகினர்.

அத்துடன் கப்பலின் உள்நாட்டு பிரதிநிதியான சீ கன்சோடியம் தனியார் நிறுவனம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும், கப்பலின் உள் நாட்டு பிரதி நிதியான சீ கன்சோர்டியம் லங்கா தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அர்ஜுன ஹெட்டி ஆராச்சி சார்பில் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொடவும் மன்றில் ஆஜரானார்.

இந்நிலையில், முதலில் இதுவரை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை சி.ஐ.டி. சார்பில் மன்றில் வாதாடிய அரசின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் முன் வைத்தார்.

'கடந்த தவணை நீதிமன்றம் இட்ட கட்டளைக்கு அமைய நாம், துறைமுக அதிகார சபையின் கீழ், துறைமுக மா அதிபரின் பொறுப்பில் உள்ள 'ரேடியோ தகவல்களை' ஆராய்வதற்காக விசாரணைகளை ஆரம்பித்தோம். இதன்போது அந்த தகவல் பதிவாகும் இயந்திரத்தில் உள்ள தகவல்களை வாசிக்க, அதற்கான மென் பொருளினை வழங்கி தகவல் தொழில் நுட்ப சேவையை வழங்கும் உள்நாட்டு நிறுவனத்தின் உதவி எமக்கு தேவைப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகளை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்துள்ளனர். அவர்களது உதவியுடனேயே அதனை ஆராயவுள்ளோம்.' என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் கூறினார்.

இதன்போது மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேலதிக அறிக்கையை ஆராய்ந்த நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம, அவ் உபகரணத்தில் இருந்த தகவல்கள் அழிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதே என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோனிடம் வினவினார்.

அதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் 'நீதிமன்ற கட்டளை பிரகாரம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்தோம் அப்போது துறைமுக மா அதிபர் அலுவலகத்தில் கப்பல் ஒருங்கிணைப்பாளராக செயற்படும் அதிகாரியிடம் வாக்கு மூலம் பெரும் போது அவர், குறித்த ரேடியோ தகவல் பதிவு கருவியில் உள்ள தகவல்கள் அழிந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்நிலையிலேயே அதன் காப்பு பிரதியைப் பெற்று, அதற்கான மென் பொருள் உதவியை வழங்கியுள்ள நிறுவனத்தின் உதவியுடன் அதனை ஆராய தீர்மானித்தோம்.' என பதிலளித்தார்.

இதனைவிட கப்பலில் இருந்து மீட்கப்பட்ட வி.டி.ஆர். உபகரணத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூர் நிறுவனத்தின் உதவியுடன் பகுப்பாய்வுகள் இடம்பெறுகின்றன.' என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் கூறினார்.

அத்துடன், கப்பலின் உள்நாட்டு பிரதிநிதி நிறுவனத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பின் 4 டெரா பைட் கொள்ளலவு கொண்ட காப்புப்பிரதி தற்சமயம் ஆராயப்பட்டு வருவதாகவும், குறித்த நிறுவனத்தின் மூன்று அதிகாரிகள் தமக்கு கிடைக்கப் பெற்ற மின்னஞ்சல்களை அழித்துள்ளதாக ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை இதன்போது ஒப்பீடு செய்து பகுப்பாய்வு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் கூறினார்.

இதனைவிட கப்பலின் கெப்டன் உள்ளிட்ட 25 பேரின் இலத்திரனியல் உபகரணங்களை சி.ஐ.டி. பெற்று அதிலிருந்த முக்கியமான தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அதனூடாக தீ பரவ முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படமொன்று வெளிப்படுத்திக் கொள்ளப்ட்டுள்ள நிலையில், அது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் இதுவரையிலான விசாரணைகளில், நாட்டின் அரச அதிகாரிகள் எவரும் தீ படவல் சம்பவத்துக்கு காரணம் என தெரியவரவில்லை என்றார்.

இந்நிலையில், கப்பலின் உள்நாட்டு பிரதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன மன்றில் வாதங்களை முன் வைத்தார்.

'விசாரணைகள் நியாயமாக நடப்பது வெளிப்படையாக தெரிய வேண்டும். எனவேதான். கப்பலின் வீ.டி.ஆர். போன்றே துறைமுக அதிகார சபையிலும் அனைத்து தகவல்களும் பதிவாகும் கருவி உள்ளது. அதனை பெற்று விசாரிக்க கோரினோம். இப்போது அதிலுள்ள தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. அதுவும் நீதிவான் கேள்வி கேட்டதால் அது வெளிப்பட்டது.' என தெரிவித்தார்.

இந்நிலையிலேயே அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் லோச்சனி அபேவிக்ரம, இவ்விவகார வழக்கை எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment