சுற்றுலாத் துறையைப் பாதுகாக்கவும் தொழில்துறையில் ஈடுபடுவோரை பாதுகாக்கவும் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை கடனற்ற தொழில்துறையாக மாற்றியமைக்க அவசர தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் கொடுப்பதற்கு நிவாரணங்களை வழங்குவதுடன், விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் துறைசார்ந்தவர்கள் மற்றும் மத்திய வங்கியின் உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை கடன் இல்லாத தொழிலாக மாற்றுவதற்கும் கொவிட் தொற்று நோயால் சுற்றுலாத் துறையில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், சுற்றுலாத் துறையை புதுப்பிக்க முறையான திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய வங்கி செயல்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் டிபி.டி.லக்ஷ்மன் இந்தக் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டினார்.
கொவிட் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் , சுற்றுலாத்துறையை நீண்ட காலமாக மிதக்க வைக்க இந்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். எந்த காரணத்திற்காகவும் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இதன்போது கூறினார்.
கொவிட்19 தொற்றுநோயால் சுற்றுலாத்துறையின் கடுமையான சரிவு காரணமாக இத் துறையில் உள்ள ஏராளமான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாக
சுற்றுலாத் துறை பங்குதாரர்கள் இந்த சந்திப்பில் வலியுறுத்தியதுடன், போதுமான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனவும் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கருத்து வெளியிடுகையில்,
கொவிட்19 காலத்தில் வழங்கப்பட்ட நிவாரணங்களை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியைத் தடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எதிர்பார்த்த கால எல்லைக்குள் சுற்றுலாத் துறையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர புதிய திட்டங்கள் வகுக்கப்படும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அரசாங்கம் பல்வேறு நிவாரணங்களை வழங்கியுள்ளது. மேலும் நிவாரணங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
கொவிட்19 சூழ்நிலையில், வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். கடன்களுக்கு கடன்களை வழங்குவதன் மூலம் இந்த நிலைமைக்கு எந்த தீர்வையும் காண முடியாது. கொவிட்19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ரூ.165 பில்லியனும், கடன்களை வழங்க ரூ.168 பில்லியனும் செலவிட்டுள்ளது. கடன் நிவாரணப் பொதிகளுக்கு ரூ.4,000 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் இதன்போது கூறினார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment