கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் தீப்பிடித்த X-Press Pearl கப்பலுக்கு பொறுப்பான மூவரும் இலங்கையை விட்டுச் செல்ல தடைவிதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் மாலுமி, அதன் பிரதான பொறியாளர், உதவி பொறியாளர் ஆகிய மூவருக்குமே இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று (31) குறித்த மூவரிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இன்றையதினம் (01) நால்வரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக 'ஹார்பர் மாஸ்டர்', வனவிலங்கு மற்றும் விருட்சங்களுக்கான குறித்த கடற்பகுதிக்கான அதிகாரி, சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை, குறித்த கப்பல் தொடர்பான உள்நாட்டு முகவர் ஆகிய நால்வரிடமே இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த அறிக்கைகள் இன்றையதினம் (01) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த மூவருக்கும் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு எதிரான தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதுடன், அதனை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் அறிவிக்குமாறும் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கப்பலை அரசாங்க பகுப்பாய்வளர் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று பார்வையிடவும், அக்கப்பலின் ஆவணங்கள், அதிலுள்ள பதிவுக் கருவி ஆகியவற்றை பரீட்சிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, 'சாகர் ஆரக்ஷா 2' என பெயரிடப்பட்ட, குறித்த கப்பலின் தீயணைப்பு நடவடிக்கை இன்று (01) பிற்பகல் நிறைவுக்கு வந்துள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் மீட்பு பணியாளர்கள் MV X-Press Pearl கப்பலிற்குள் பிரவேசித்து, தீயினால் ஏறபட்ட இழப்பு தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாக தூதரகம் அறிவித்துள்ளது.
இந்திய இலங்கை கூட்டு முயற்சியின் செயற்பாட்டின் மூலம் இது வெற்றியளித்துள்ளதாக, தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்குச் சொந்தமான, 37,000 தொன் எடை கொண்ட X-Press Pearl கப்பலானது, 1,486 கொள்கலன்களுடன் பயணித்த நிலையில் கடந்த மே 19 ஆம் திகதி இவ்வாறு தீப்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment