(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகியுள்ள பேர்ள் சரக்கு கப்பலினால் உப்பு உற்பத்தி கைத்தொழிலுக்கு பாதிப்பு ஏற்டாது. உப்பு உற்பத்தியில் நெருக்கடி நிலை ஏற்படும், உப்பின் விற்பனை விலை அதிகரிக்கப்படும் என போலியான செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு வருடத்திற்கு தேவையான உப்பு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 30 அத்தியாவசிய உணவு பொருட்களின் நிர்ணய விலையினை தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சதொச விற்பனை நிலையங்களில் 60 ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் உப்பினை 43 ரூபாவிற்கும், 50 ரூபா பெறுமதியான தூள் உப்பினை 35 ரூபாவிற்கும் நுகர்வோர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வர்த்தகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து வெளியான இரசாயன பதார்த்தங்கள் கடல் நீரில் கலந்துள்ளன. இதன் காரணமாக உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு உப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என ஒரு தரப்பினர் தவறான கருத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்கள். இதனால், பொதுமக்கள் தேவையற்ற வகையில் அச்சம் கொண்டு அளவுக்கு அதிகமாக உப்பினை கொள்வனவு செய்துள்ளார்கள்.
தீக்கிரையான கப்பலில் இருந்து வெளியாகியுள்ள இரசாயன பதார்த்தங்கள் காரணமாக உப்பு உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பது விஞ்ஞான ஆய்வு பரிசோதனை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டை, புத்தளம் ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும். அரச மற்றும் தனியார் உப்பு உற்பத்தி ஆலைகளில் இரண்டு வருட காலத்திற்கு தேவையான உப்பு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
உப்பு அவைசார் உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படாது. தேவைக்கு மேலதிகமாகவே உப்பு தற்போது இருப்பில் உள்ளது. நுகர்வோர் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 60 ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் உப்பினை 43 ரூபாவிற்கும், 50 ரூபா பெறுமதியான உப்பினை 35 ரூபாவிற்கும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை கொள்வனவு செய்ய முடியும்.
30 அத்தியாவசிய உணவு பொருட்களின் நிர்ணய விலையினை தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைக்க அரச மற்றும் தனியார் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment