முட்டுக்கொடுப்பைத் தொடருமா முஸ்லிம் காங்கிரஸ்...? - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

முட்டுக்கொடுப்பைத் தொடருமா முஸ்லிம் காங்கிரஸ்...?

எம்.ஐ.லெப்பைத்தம்பி

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத்தலைவருமான மதிப்பிற்குரிய பிள்ளையான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உரையில் முஸ்லிம் சமூகம் தொடர்பில் தெரிவித்த தெளிவற்ற கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களையும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நேற்று நடந்த நிருவாக ரீதியாக தாக்குதலும் முஸ்லிம் சமூகப்பரப்பில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் அரை நூற்றாண்டு காலம் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கீழிருந்த வாழைச்சேனை வைத்தியசாலையின் பிறப்பு, இறப்பு பதிவு நடைமுறை கோறளைப்பற்றுக்கு மாற்றப்பட்டுள்ளமை நிருவாக ரீதியான அடக்குமுறையின் ஒரு செயற்பாடாகவே அமைந்துள்ளது.

இவ்வாறு திரைமறைவில் பல்வேறு காய்நகர்த்தல்களை தமிழ் அரசியல் தரப்பினர் மேற்கொண்டு வருவதை முஸ்லிம் அரசியல் பராமுகமாகவே இருந்து வருகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

நாம் எதைச் செய்தாலும் எதிர்த்து நிற்க எவரும் இல்லையென்ற மனோநிலையில் செயற்படுவதை அண்மைக்காலமாக நாம் கண்டு வருகின்றோம்.

மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸும் மெளனம் களைய வேண்டும்.

இந்த நிலையில், நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து, கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆட்சியமைக்க உதவிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோ அதன் பிரதேச உறுப்பினர்களோ எந்தவித மறுப்பையும் எதிர்ப்பையும் தெரிவிக்காத நிலையில், முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டமை, பதிவு செயற்பாடுகளை தன்னிச்சையாக ஒரு தலைப்பட்சமாக தமிழ்ப் பிரதேசத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதரவிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற பலமான எதிர்பார்ப்பும் அதனை பகிரங்கமாக அறிவிப்புச் செய்ய வேண்டும் என்ற பலமான கருத்தும் உருவாகியுள்ளது.

ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தும் அமைந்த ஆட்சியைக் காப்பாற்ற அரும்பாடு பட்டும் இப்பிரதேச முஸ்லிம்கள் எதனையும் அனுபவிக்காத நிலையில், கடந்த கொரோனா காலத்தில் முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு நிலை காணப்பட்டது. இன்று கொரோனா அசாதாரண சூழலில் மக்கள் உயிராபத்தில் தத்தளிக்கும் நிலையில் இரவோடு இரவாக நிருவாக ரீதியான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இதனை முஸ்லிம் உறுப்பினர்களின் முட்டுக்கொடுப்பில் தவிசாளர் கதிரையில் தாக்குப் பிடிக்கும் பிரதேச சபையின் தவிசாளரே தலைமையேற்று நடைமுறைப்படுத்தியுள்ளமை கவலையளிக்கின்ற விடயமாகும்.

இவ்வாறான நிலையில், முஸ்லிம் சமூகத்துக்கெதிரான தமது எதிர்ப்பினை வெளியிடுமுகமாக முஸ்லிம் காங்கிரஸ் அணி தமது ஆதரவை விலக்கிக் கொள்ளுமா? என்ற கேள்வி எழுகின்றது.

தற்போதைய நிலவரத்தின்படி பெரும்பான்மையை இழந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி முஸ்லிம் காங்கிரஸினால் தான் ஆட்சியில் நீடிக்கிறது.

இவ்வாறான நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் மெளனம் காத்தால், குறித்த கருத்துக்களையும் செயற்பாடுகளையும் ஆதரிப்பதாக அமைந்து விடும்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் இவ்வாறான முஸ்லிம் சமூகத்துக்கெதிரான செயற்பாடுகள் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருவதுடன், இது தொடர்பில் முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்களின் சமூகம் சார்ந்து தமது எதிர்ப்புக்களை முறையாக வெளிப்படுத்தாமை முஸ்லிம் சமூகத்திற் செய்யும் அநீதியாகவும் இவ்வாறான நெருக்குவாரங்கள் இருப்பதையும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரதேச முஸ்லிம் சமூகம் கடந்த கால இழப்புக்களிலிருந்து மீண்டெழுவதற்குள் மீண்டும் மீண்டும் இவ்வாறான அடக்குமுறைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டு மெளனியாக இருக்க முடியாது.

ஆகவே, இவ்வாறான சமூகம் சார்ந்து அநீதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் காங்கிரஸும் முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்களும் தற்போது தாம் வழங்கிக் கொண்டிருக்கும் கோறளைப்பற்று பிரதேச சபை ஆட்சிக்கான தனது ஆதரவினை விலக்கிக் கொள்ளுமா?

No comments:

Post a Comment