கப்பலில் கதிரியக்க பொருட்கள் எவையும் இருக்கவில்லையாம் : விசாரணை செய்யும் பொறுப்பு சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

கப்பலில் கதிரியக்க பொருட்கள் எவையும் இருக்கவில்லையாம் : விசாரணை செய்யும் பொறுப்பு சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய தீ தொடர்பில், விசாரணை செய்யும் பொறுப்பு சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய இந்த விசாரணைகள் சி.ஐ.டி.யின் 10 பேர் கொண்ட சிறப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் குறித்த கப்பலின் கெப்டன் உட்பட மூவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டு பிரஜையான குறித்த கப்பல் கெப்டன், பிரதான பொறியியலாளரான ரஷ்ய பிரஜை, உதவி பொறியியலாளரான இந்திய பிரஜை ஆகியோரிடமே வெள்ளவத்தை சபாயா ஹோட்டலுக்கு சென்ற சி.ஐ.டி.யினர் வாக்கு மூலம் பதிவு செய்துகொண்டனர்.

குறித்த கப்பல் ஊழியர்கள் உட்பட 23 பேர் அங்கு தனிமைபப்டுத்தப்ப்ட்டுள்ள நிலையில், நேற்று (31.05.2021) அங்கு வைத்து வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக நேற்று முன்தினமே வாக்கு மூலம் பெற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் பிற்பகல் 3.45 அளவில் சென்றிருந்தனர்.

எனினும், கப்பல் சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் கெப்டனிடம் இருக்காததால் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை நேற்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முற்பகல், அந்த ஹோட்டலுக்கு சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன் லமாஹேவா தலைமையிலான 4 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு, குறித்த மூவரிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்தது.

இந்நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்ன ஆகியோரின் ஆலோசனைக்கு அமையவும், சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணம் வழங்கியுள்ள வழி காட்டல்களுக்கு அமையவும் பெறப்பட்ட வாக்கு மூலங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்ப்ட்டுள்ளன.

இந்நிலையில் சட்டமா அதிபர் வாக்கு மூலங்களை ஆராய்ந்த பின்னர் வழங்கும் மேலதிக ஆலோசனைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இவ்வாறான நிலையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அணு சக்தி அதிகார சபையும் அவதானம் செலுத்தி ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.

எனினும் இலங்கை அனுசக்தி அதிகார சபை முன்னெடுத்த ஆய்வுகளில், கப்பலில் இருந்து கரை ஒதுங்கிய கழிவுகள், திரவியங்களில் கதிரியக்க பொருட்கள் எவையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக குறித்த அதிகார சபையின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

இதனிடையே, நச்சுப்பொருட்கள் அடங்கிய இரண்டு கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் இருந்தமை தொடர்பாக சர்வதேச பொலிஸார் அறிந்திருந்ததாக ரியாத்தின் பிரின்சஸ் நவுரா பல்கலைக்கழக ஆய்வுத் திணைக்களத்தின் பேராசிரியர் சந்திமா விஜேகுணவர்தன தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இலங்கை ஏற்கனவே அரிந்திருந்ததா உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகலில் அவதானத்துக்கு உட்படுத்தப்படும் எனவும், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தீ பரவல் நிலை ஏற்பட்டதா என்பது குறித்தும் அதில் அவதானம் செலுத்தப்படும் எனவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பேராசிரியர் சந்திமா விஜேகுணவர்தனவின் கருத்து தொடர்பில் சர்வதேச பொலிஸாரின் கருத்தினை அறிய முற்பட்ட போதும், இச்செய்தி அச்சுக்கு போகும் வரை அவர்கள் பதிலளித்திருக்கவில்லை.

No comments:

Post a Comment