(நா.தனுஜா)
சுதந்திர ஊடகவியலாளர் சஜீவ விஜேவீரவினால் பிரசுரிக்கப்பட்ட செய்திக்கான தகவல் மூலத்தைக் கண்டறியுமாறு கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளமையானது, ஊடக சுதந்திரத்தின் மீதும் பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையின் மீதும் பிரயோகிப்படும் பாரிய அச்சுறுத்தலாகும் என சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து சுதந்திர ஊடக இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது சுதந்திர ஊடகவியலாளரான சஜீவ விஜேவீர என்பவரால் நடாத்தப்படும் 'ரட்ட' என்ற இணைய ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தியொன்றின் தகவல் மூலத்தை வெளியிடுமாறு கோரி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் காலி மாவட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம் ஆராய்ந்து பார்த்தபோது, 'கொரோனா தடுப்புப் பணியைத் தவிர்த்து, நற்பெயர் பெறும் (நியாயமற்ற அடிப்படையில்) வைத்தியர்கள்' என்ற தலைப்பில் குறித்த இணையப் பக்கத்தில் செய்தியொன்று வெளியாகியுள்ளது. அதனை சுட்டிக்காட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஷெல்டன் பெரேரா பொலிஸ் நிலையத்தில் மேற்கண்டவாறு முறைப்பாடளித்திருக்கின்றார்.
குறித்த செய்தியை எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்த தகவல் மூலம் என்னவென்பதைக் கண்டறியுமாறு அந்த முறைப்பாட்டில் கோரப்பட்டிருந்தது. இவ்வாறு செய்தியொன்றின் தகவல் மூலத்தை வெளியிடுமாறு ஊடகவியலாளர்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பதென்பது, ஊடக சுதந்திரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும், அதேவேளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் முரணானதாகவே அமையும்.
இந்த முறைப்பாட்டின் மூலம் 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 36 ஆவது சரத்து மீறப்பட்டுள்ளது. அதுமாத்தரமன்றி குறித்த செய்தியைப் பொறுத்த வரையில் ஊடகவியலாளர் சஜீவ விஜேவீர, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கடப்பபாடுகளைப் பின்பற்றியிருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அதேவேளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 40 ஆவது சரத்தின்படி, வைத்தியசாலையின் பணிப்பாளரினால் அளிக்கப்பட்ட முறைப்பாடானது செய்திக்கான தகவல் வழங்கும் மூலங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது காணப்படும் நெருக்கடி நிலைமையில் உயர்மட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் அவசியமான விடயம் என்று கருதுகின்றோம்.
செய்தியொன்று வெளியானதன் பின்னர் அதற்குப் பதிலளிப்பதற்கான உரிமையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஊடகவியலாளர் சஜீவ விஜேவீரவை பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பதும் குறித்த செய்திக்கான தகவல் மூலம் என்னவென்பதை வெளியிடுமாறு அழுத்தம் பிரயோகிப்பதும் ஊடக சுதந்திரத்தின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தமாகவே அமையும்.
அதுமாத்திரமன்றி, அது பிரஜைகள் வசமுள்ள தகவல் அறியும் உரிமைக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய செயற்பாடுகளை நாம் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment