கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் 9.5 கிலோ மீற்றர் தொலைவில் தீ பரவல் விபத்துக்குள்ளாகியுள்ள பேர்ள் கப்பலினால் கடற்கரை பிரதேசத்தை தளமாக கொண்ட சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு ஏற்படவுள்ள பாதிப்புக்களை மேம்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாணந்துறை தொடக்கம் - நீர்கொழும்பு வரையிலான கடற்கரையில் சுற்றுலா பயணிகள் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
ஏனைய கடற்பிரதேசங்களில் நிலைமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கடற்கரை சுற்றுலாத்துறை தளத்தை தவிர்த்து ஏனைய சுற்றுலா தளங்களை சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ஈர்ப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகியுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் சுற்றுலாத்துறைக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
விமான நிலையங்கள் திறப்பு
நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதுவருட கொவிட் கொத்தணி வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவுடன் நீக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா சேவைத்துறையினை மீள கட்டியெழுப்பும் நோக்குடன் மாத்திரம் விமான நிலையங்கள் திறக்கப்படவில்லை. ஏனைய தேவைகளை கருத்திற் கொண்டு விமான நிலையங்கள் திறக்கப்பட தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இலங்கை வரும் விமானமொன்றில் ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக காணப்பட வேண்டும். அத்துடன் நாட்டிற்குள் வரும் சுற்றுலா பயணிகள் கொவிட்-19 வைரஸ் ஒழிப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
சுற்றுலாப் பிரயாணிகள்
தற்போதைய நிலையில் இலங்கைக்கு பெருமளவிலான சுற்றுலாப் பிரயாணிகள் வருகை தருவார்களா என்பது சந்தேகத்திற்குரியது.
ஏனெனில் இலங்கைக்கு பிரதானமாக சுற்றுலா பயணத்தில் ஈடுபடும் நாடுகள் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் வார மற்றும் மாத கணக்கில் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் புதுவருட கொவிட் கொத்தணி காரணமாக ஒரு சில நாடுகள் இலங்கைக்கு சுற்றுலாப் பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளன.
ஆகவே பூகோளிய மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட் பெருந்தொற்றின் சவால்களில் இருந்து மீள பொறுமையுடன் செயற்படுவது அவசியமாகும்.
கடலில் நீராட அனுமதியில்லை
கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் 9.5 கிலோ மீற்றர் தொலைவில் தீ விபத்தின் காரணமாக பாணந்துறை தொடக்கம் நீர்கொழும்பு வரையிலான கடற்கரை பகுதி பெருமளில் பாதிக்கப்பட்டுள்ளன.
கப்பலில் இருந்து வெளியாகிய பொருட்கள் மற்றும் இரசாயன பதார்த்தங்கள் பாணந்துறை தொடக்கம் நீர்கொழும்பு வரையிலான கடற்கரை பகுதியில் தேங்கியுள்ளன.
இப்பொருட்களை அகற்றுவதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள. இதன் காரணமாக இக்கடற்கரை பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கை மாத்திரமல்ல சுற்றுலாத்துறை சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. சுற்றுலாத்துறை சேவையில் மேற்கு தொடக்கம் தெற்கு வரையிலான கடற்கரை பிரதேசங்கள் முக்கியமானதாகும்.
இத்தீப்பரவல் காரணமாக கடல் வளத்திற்கும், கடற்கரை சுற்றுசூழலுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர் செய்ய 11 சூழல் நேய அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளன. தற்போதும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடல் நீரில் நீராடுவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் ஆய்வு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாணந்துறை தொடக்கம் நீர் கொழும்பு வரையிலான கடற்கரையில் பொது மக்களும், சுற்றுலாப் பிரயாணிகளும் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. நாட்டில் உள்ள ஏனைய கடற்கரை பகுதிகளின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் தொடர்புடைய நிறுவனங்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றார்.
வீரகேசரி
No comments:
Post a Comment