அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதில் இடம்பெறாத சீனா, தனக்கென சொந்தமாக விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்து வருகிறது.
“தியான்ஹே” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மையப்பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விண்வெளி நிலையத்துக்கான எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள், விண்வெளி உடைகள், உணவுப் பொருள்களுடன் “தியான்சோ-2” என்ற விண்கலத்தை கடந்த சனிக்கிழமை சீனா விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
இந்த நிலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டு வரும் ‘தியான்ஹே’ விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரர்களை அடுத்த மாதம் அனுப்ப உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
‘சென் 12’ என்ற விண்கலம் மூலம் ஜியூகுவான் ஏவுத்தளத்திலிருந்து 3 விண்வெளி வீரா்கள் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் இவர்கள் 3 மாத காலத்துக்கு அங்கு தங்கி இருந்து பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் சீன விண்வெளி நிலைய திட்டத்தின் துணை தலைமை வடிவமைப்பாளர் யாங் லிவி தெரிவித்தார்.
விண்வெளி நிலையத்துக்கு செல்லும் விண்வெளி வீரா்கள் யார், விண்கலம் செலுத்தப்படவுள்ள தேதி போன்ற விவரங்களை அவர் தெரிவிக்காத நிலையில் இதில் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை என்பதை மட்டும் உறுதிப்படுத்தினார்.
No comments:
Post a Comment