இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தாலும் மரணங்களின் வீதம் அதிகரிப்பு - பதுளையில் தந்தையும், மகளும் கொரோனாவுக்கு பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தாலும் மரணங்களின் வீதம் அதிகரிப்பு - பதுளையில் தந்தையும், மகளும் கொரோனாவுக்கு பலி

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது மிகச்சிறியளவில் வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருந்தாலும், மரணங்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனினும் தற்போது நாளாந்தம் பதிவாகும் மரணங்களை அறிவிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதால் நாட்டின் நிலைமை குறித்து ஓரளவு சரியான மதிப்பீட்டை செய்ய முடியும் என்றும் வைத்தியர்கள்  குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக கொவிட் மரணங்கள் பதிவாகிக் கொண்டிருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தில் பசறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகளும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். பசறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் இதனை உறுதிப்படுத்தினார்.

இவர்களில் 22 வயதுடைய மகள் கடந்த 4 ஆம் திகதி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் இவ்வாறு உயிரிழந்த மகளின் 71 வயதுடைய தந்தை இன்று செவ்வாய்கிழமை காலை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் பசறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி 57 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 32 ஆண்களும் 25 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணி வரை 1843 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் நாட்டில் 227765 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 190464 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு, 35098 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment