இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான கப்பல் தொடர்பில் இதுவரை குற்ற விசாரணைப் பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான கப்பல் தொடர்பில் இதுவரை குற்ற விசாரணைப் பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பதிவு

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் இதுவரையில் வெவ்வேறு தரப்பினரிடம் குற்ற விசாரணைப் பிரிவினரால் 32 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. குறித்த கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கப்பலில் காணப்பட்ட தரவுகளை சேகரிக்கும் உபகரணங்கள் அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்பாடல் தரவுகள் அனைத்தும் குறித்த உபகரணங்களிலேயே பதிவாகியுள்ளன. அந்த தரவுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குறித்த உபரணங்களை தயாரித்த நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குற்ற விசாரணைப் பிரிவினரால் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று திங்கட்கிழமை குறித்த கப்பலின் கெப்டன் சமுத்திர சூழல் பாதுகாப்பு சட்டத்தின் 12 மற்றும் 26 ஆவது உறுப்புரைகளுக்கு அமையவும், தண்டனை சட்டக் கோவையின் 113 ஆவது உறுப்புரைக்கமையவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பின்னர் அவருக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டது.

குற்ற விசாரணைப் பிரிவினரின் விசேட குழுவினரால் மின்னஞ்சல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் சமுத்திர பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும். அத்தோடு சிவில் நீதிமன்றத்தின் ஊடாக நஷ்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்ற விசாரணைப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment