மூன்று ஆண்டுகளுக்கு பின் இலங்கை வரும் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

மூன்று ஆண்டுகளுக்கு பின் இலங்கை வரும் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி

இலங்கைக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பங்கெடுப்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இம்மாதம் 28 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தின்போது இந்தியா மூன்று டி-20 போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கெடுக்கும்.

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை வரும் இந்திய அணி 29 நாட்கள் நாட்டில் தங்கியிருக்கும்.

இந்தியா இறுதியாக இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை கடந்த 2018 மார்ச் மாதம் மேற்கொண்டிருந்தது. இதன்போது இந்திய அணி சுதந்திர கிண்ணத்தை கைப்பற்றி வெற்றியுடன் நாடு திரும்பியது.

2023 உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெறுவதோடு மட்டுமல்லாமல், இந்த ஆண்டு இறுதியில் டி-20 உலகக் கிண்ணத்துக்கான தொடர்ச்சியான தயாரிப்புகளிலும் இந்த போட்டி முக்கிய பங்கு வகிக்கும். இந்த போட்டி உயிரியல் பாதுகாப்பு சூழலில் நடைபெறும். 

தவானிடம் தலைமைப் பொறுப்பு
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அந்த அணியில் ரோகித் சர்மா, ரிஷாப் பந்த், லோகேஷ் ராகுல், ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில் பும்ரா, மொஹம் ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், மொஹமட் சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்களை பி.சி.சி.ஐ நேற்று அறிவித்துள்ளது.

இதன்படி இந்திய அணியின் தலைவராக ஷிகார் தவானும், துணைத் தலைவராக புவனேஷ்வர் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

35 வயதான ஷிகர் தவான், கடந்த இரண்டு ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி உள்ளார். தற்போது இடை நிறுத்தப்பட்ட 2021 ஐ.பி.எல். தொடரின் 8 ஆட்டங்களில் 380 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அது மட்டுமின்றி தற்போதைய அணித்தேர்வுக்கு உள்ள வீரர்களில் மூத்த வீரர் தவான் தான். இந்திய அணிக்காக கடந்த 8 ஆண்டுகளாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad