இலங்கைக்கு விரைவில் 265,000 தடுப்பூசிகள் வந்தடையும் : நம்பிக்கை வெளியிட்டுள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கம் - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

இலங்கைக்கு விரைவில் 265,000 தடுப்பூசிகள் வந்தடையும் : நம்பிக்கை வெளியிட்டுள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

(நா.தனுஜா)

இலங்கைக்கு கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுத்தருவதற்கு ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் முன்வந்திருக்கும் நிலையில், விரைவில் 265,000 தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இலங்கைக்கு அவசியமான மருந்து உபகரணங்களை நன்கொடையாக வழங்கியமைக்காக சுவிற்சர்லாந்து அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றிகூற விரும்புகின்றோம்.

அதேவேளை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம், இலங்கை உள்ளடங்கலாக அவசியத் தேவையுடைய நாடுகள் சிலவற்றுக்கு அனுப்பி வைப்பதற்காக 30 மில்லியன் தடுப்பூசிகளை ஜேர்மனி ஒதுக்கியிருக்கிறது.

அதேவேளை 600,000 அஸ்ராசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுத்தருமாறு எமது நாட்டினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைப் பரிசீலனை செய்த சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு நன்றி பாரட்டுகின்றோம். 

இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கும் இலங்கை மக்கள் மீதாக அன்பை வெளிப்படுத்துவதற்கும் இந்த நாடுகள் கொண்டிருக்கக் கூடிய அர்ப்பணிப்பைப் பெரிதும் வரவேற்கின்றோம்.

இவற்றின்படி, 'கொவெக்ஸ்' திட்டத்தின் கீழ் ஏனைய நாடுகளால் வழங்கப்படும் அன்பளிப்பு அடிப்படையிலும் ஜப்பானால் வழங்கப்படும் உதவியின் கீழும் 265,000 தடுப்பூசிகள் விரைவில் இலங்கையை வந்தடையும்.

மேலும் இதுவரை காலமும் வழங்கி வந்த உதவிகள் மற்றும் ஆதரவிற்காக உலக சுகாதார ஸ்தாபனத்திற்கும் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம். 

அதுமாத்திரமன்றி இலங்கையில் பணியாற்றும் ஏனைய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களினால் காண்பிக்கப்பட்ட ஆதரவையும் பெரிதும் வரவேற்கின்றோம்.

இந்நிலையில் எதிர்பார்க்கப்படும் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்ததன் பின்னர் அவற்றை உரியவாறு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad