இலங்கையில் குழந்தை பியர் குடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் : நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள கைதான இளைஞன் - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

இலங்கையில் குழந்தை பியர் குடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் : நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள கைதான இளைஞன்

(செ.தேன்மொழி)

பேலியகொட பகுதியில் 4 வயதுடைய சிறுவனொருவனுக்கு பியர் மதுப்பாணத்தை அருந்த கொடுத்தமை தொடர்பில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான இளைஞனுக்கு எதிராக குற்றவியல் கட்டளைச் சட்டம், சிறுவர் மற்றும் இளைஞர் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சிறுவன் ஒருவனுக்கு பியர் பாணத்தை அருந்த செய்யும் காணொளி பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஊடகங்களிலும் செய்தி வெளியாகிருந்த நிலையில். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

பேலியகொட பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் குறித்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர் மற்றும் சந்தேக நபரான இளைஞர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சந்தேக நபரான இளைஞன் சிறுவனின் அயல் வீட்டில் வசித்து வருவதுடன், சிறுவன் அவர்களுடன் நெருங்கி பழகி வருவதால் இளைஞன் தொடர்பில் எவ்வித சந்தேகமும் தங்களுக்கு ஏற்பட்டிருக்கவில்லை என்று சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞர் வெற்று பியர் டின்னில் குளிர்பானத்தை ஊற்றியே சிறுவனிடம் கொடுத்ததாகவும், அதனை பாரதூர விடயமாக கருதவில்லை என்றும், தான் விநோதத்திற்காகவே இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இளைஞனுக்கு எதிராக குற்றவியல் கட்டளைச் சட்டம், சிறுவர் மற்றும் இளைஞர் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபரான இளைஞன் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலிகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad