(எம்.மனோசித்ரா)
கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் குறித்து ஊடகங்களின் முன்னிலையில் பேசுவது பிரயோசனமற்றது. இவ்விவகாரம் தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஆராயப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கட்சியின் உள்ளக விவகாரங்களை பொது வெளியில் பேச ஆரம்பித்தமையால் ஐக்கிய தேசிய கட்சிக்கு என்ன ஆனது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு கட்சி முரண்பாடுகள் தொடர்பில் கட்சிக்குள்ளேயே பேசி தீர்வு காணப்பட வேண்டும்.
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரின் தீர்மானம் அவருடையதாகும். அது தொடர்பில் எமக்கு ஏதேனும் நிலைப்பாடுகள் காணப்படுமாயின் அதனை நாம் கட்சிக்குள் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்.
கட்சியின் பதவி வகிப்பவர்கள் தமது கருத்துக்களை வெளியிட முடியும். அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது. அவ்வாறான கருத்துக்கள் தொடர்பில் விமர்சனங்கள் காணப்பட்டால் அதனை தெரிவிக்க வேண்டிய களம் ஊடகங்கள் அல்ல என்றார்.
No comments:
Post a Comment