(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி, மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலுள்ள எண்ணெய் கடல் நீரில் கலக்கவில்லை. எண்ணெய் கசிவு ஏற்படும் போது முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முன்னாயத்தமாக உள்ளோம் என கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த
அவர் மேலும் குறிப்பிடுகையில், கப்பல் விபத்துக்குள்ளான காலப்பகுதியில் இருந்து இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பிரகாரம் கடல் நீரில் எண்ணெய் கலக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கப்பல் விபத்துக்குள்ளான நாளில் இருந்து தற்போது வரை அடையாளப்படுத்தப்பட்ட கடற்கரையோரங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடற்காற்றின் திசைக்கு அமைய கரையொதுங்கும் கப்பலின் கழிவுகள் நாளாந்தம் சேமிக்கப்பட்டு கரையோரப்பகுதி தூய்மைப்படுத்தப்படுகின்றன.
சட்ட நடவடிக்கைகளுக்காக அகற்றப்பட்ட கழிவுகள் கடற்கரையோர பகுதிகளில் பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
எமது நாட்டின் கடற்பரப்பில் இருந்து விபத்துக்குள்ளான கப்பலை அகற்றும் நடவடிக்கையினை கப்பலின் உரிமை நிறுவனம் துரிதமாக முன்னெடுத்துள்ளது.
கப்பலில் சேமிக்கப்பட்டுள்ள எண்ணெய் கடல் நீரில் கசியுமானின் அதனை எதிர் கொள்ள தயாராகவுள்ளோம். இதற்கான ஆலோசனை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
கப்பல் தீ விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமைகள், டொல்பீன் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் உடல்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த உயிரினங்கள் இறப்பதற்கான காரணம் விரைவில் வெளியிடப்படும் என்றார்.
No comments:
Post a Comment