கொரோனாவுக்கு மத்தியில் மக்களுக்கு மேலுமொரு பெருஞ்சுமை - அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளை சகலரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்கிறார் சம்பிக்க - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

கொரோனாவுக்கு மத்தியில் மக்களுக்கு மேலுமொரு பெருஞ்சுமை - அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளை சகலரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்கிறார் சம்பிக்க

எம்.மனோசித்ரா

கொவிட் தொற்றின் காரணமாக பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு எரிபொருள் விலை அதிகரிப்பானது மேலுமொரு பெருஞ்சுமையாகவே அமையும். அரசாங்கத்தால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையல்ல. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளை சகலரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் விலை அதிகரிப்பானது கொவிட் தொற்றால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு மற்றுமொரு பெருஞ்சுமையாகவே அமையும். இந்த நிலைமையை கடந்த நல்லாட்சியுடன் ஒப்பிட்டு அவதானிக்க வேண்டும். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் காணப்பட்ட எரிபொருட்களின் விலைகளில் நல்லாட்சி அரசாங்கத்தில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

எரிபொருள் விலைக்கான விலை சூத்திரமொன்று உருவாக்கப்படும் வரை எம்மால் குறைக்கப்பட்ட விலைகளே தொடர்ந்தும் காணப்பட்டன. எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தமையின் காரணமாகவே இலங்கையிலும் எரிபொருள் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் தாங்கியொன்றின் விலை 68 - 70 டொலர்களாகவே உள்ளது. இதேபோன்று சுத்தீகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் தாங்கியொன்றின் விலை 75 அல்லது 76 டொலராக காணப்படுகிறது. மசகு எண்ணெய் தாங்கியொன்றின் விலை 70 டொலர் எனக் கொண்டால், இலங்கை ரூபாவில் அதன் விலை 14000 ரூபாவாகும்.

அத்தோடு இந்த தாங்கிகள் 159 லீற்றர் கொள்ளளவு கொண்டவை. அதற்கமைய ஒரு லீற்றர் மசகு எண்ணெயின் விலை 84 ரூபாவாகும். அதற்கமைய மசகு எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை அவதானிக்கும் போது தாங்கியொன்றின் விலை உலக சந்தையில் சுமால் 5 டொலர்களால் மாத்திரமே அதிகரிக்கும்.

எனவே இந்த எரிபொருட்களின் விலையை 15 ரூபாவால் அதிகரிப்பதே போதுமானது. அதற்கேற்ப இவற்றின் விலையும் 100 ரூபாவை அண்மித்ததாகவே காணப்படும்.

எனவே அரசாங்கத்தால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள விலையேற்றங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையல்ல. கடந்த ஆண்டு நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்த காலத்திலும் பெட்ரோல், டீசல் ஊடாக 53 பில்லியன் ரூபா வரியை அரசாங்கம் அறவிட்டிருந்தது.

அதேபோன்று இப்போதும் தமக்கான வருமானம் குறைவடைந்துள்ளதால் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். 

கொவிட் தொற்றின் காரணமாக ஒருவேளை உணவிற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இது ஒரு பாரிய தாக்குதலாகும். தனவந்தர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ள அரசாங்கம் சாதாரண மக்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல் இதுவாகும். எனவே எரிபொருள் விலையைக் குறைத்து நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் வழங்கிய சலுகையை மீண்டும் மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment