பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கல்வியமைச்சராக இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் இலவசக் கல்வி முழுமையாக சீர்குலைந்துள்ளது : மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கல்வியமைச்சராக இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் இலவசக் கல்வி முழுமையாக சீர்குலைந்துள்ளது : மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு

(நா.தனுஜா)

இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறையில் இருப்பதாகக் கூறுகின்றார்கள். இருப்பினும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கல்வியமைச்சராக இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் இலவசக் கல்வி முழுமையாக சீர்குலைந்துள்ளது என்று மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இவ்வருடம் மே மாதம் வரையில் வீடுகளில் இருந்தவாறு கல்விச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் மாணவர்களில் 70 சதவீதமானோர் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

ஏனெனில் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இணைய வசதியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. அவ்வாறு இணைய வசதி இருந்தாலும், வலைப்பின்னல் (சிக்னல்) வசதி இல்லாததன் காரணமாக மாணவர்கள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

நாட்டில் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை முழுமையான பயணக்கப்பட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அக்காலப்பகுதியில் மூன்று வேளை உணவருந்தா விட்டாலும் கூட, தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுத்து விட வேண்டும் என்று பெற்றோர்கள் பலவிதத்திலும் முயற்சித்து வருகின்றார்கள். 

எனினும் இதன் மூலம் சில நிறுவனங்கள் பெருமளவில் இலாபமுழைக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றன. இணைய இணைப்பைப் பெறுவதற்காக டேட்டா கார்டை பெறுவதற்கான வசதி இருந்தாலும் கூட, அதனை வாங்குவதற்கான கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.

இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறையில் இருப்பதாகக் கூறுகின்றார்கள். இருப்பினும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கல்வியமைச்சராக இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் இலவசக் கல்வி முழுமையாக சீர்குலைந்துள்ளது. 

நாட்டை முழுவதுமாக முடக்கி, மக்களுக்கு 5000 ரூபா வழங்கினால் அனைத்துப் பிரச்சினைகளும் சுமுகமாக முடிந்துவிடும் என்று அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது. 

கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்துள்ள போதிலும், அதற்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment