அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் - ருவன் விஜேவர்தன - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் - ருவன் விஜேவர்தன

எம்.மனோசித்ரா

நாட்டின் பொருளாதாரம், மக்களின் சுகாதாரம், கல்வி, சூழல் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அனைத்தையும் சீரழித்துள்ள அரசாங்கம் தற்போது மக்களின் கருத்து சுதந்திரத்தையும் இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் பரப்புபவர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும் வகையில் காணொளி பதிவொன்றை இட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இன்று இந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரம், நாட்டு மக்களின் சுகாதாரம், கல்வி, சூழல் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அனைத்தும் சீரழிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் ஜனநாயகத்தை சீரழிக்கும் செயற்பாடுகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் போது, தகவல் அறியும் உரிமை சட்டத்தை 2016 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கினோம். நாட்டினுள் ஊடக சுதந்திரத்தை ஸ்தாபித்தோம். எமக்கு எதிராக பல செய்திகள் பகிரப்பட்ட போதும், அவ்வாறானவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் எமது அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படவில்லை. 

ஆனால் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுபவர்களை அநாவசியமாக கைது செய்துள்ளனர். அரசியல் தீர்மானத்திற்கமைய விசேட பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக நாட்டு மக்களின் கருத்து சுதந்திரத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. 

அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுபவர்களை ஒழிப்பதே உண்மையில் இதன் மூலம் இடம்பெறுகிறது. இவ்வாறு நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது. இன்று நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி இதற்கு எதிராக குரல்கொடுக்கும். ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமல்ல. ஜனநாயகத்தை பாதுகாக்கும் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment