இலங்கை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழந்தமைக்கான காரணம் என்ன ? - வெளிப்படுத்தினார் ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

இலங்கை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழந்தமைக்கான காரணம் என்ன ? - வெளிப்படுத்தினார் ஹர்ஷ டி சில்வா

(நா.தனுஜா)

அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்குப் புறம்பான செயற்பாடுகள், நாட்டு மக்களின் உரிமைகளைப் புறக்கணித்தமை, தொடர்ச்சியான இராணுவமயமாக்கம் உள்ளிட்ட மோசமான பல செயற்பாடுகளின் விளைவாகவே இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாதுபோயுள்ளது. இதன் விளைவாக எமது பொருளாதாரம் மேலும் நெருடிக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தினால் நாட்டிற்கு எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படும் என்று வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த எமது நாடு, நேற்றுமுன்தினம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினால் மேலும் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ளவுள்ளது. இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகள் கிடைக்கப் பெற்றிருக்கும் அதேவேளை எதிராக வெறுமனே 15 வாக்குகள் மாத்திரமே கிடைத்திருக்கின்றன. 

ஏற்கனவே கடந்த 2010 - 2016 வரையான காலப்பகுதியில் எமது நாட்டிற்கு அந்த வரிச்சலுகை கிடைக்கப் பெறவில்லை. தரவுகளின் அடிப்படையில் நோக்குகையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்காத 2011 - 2016 வரையான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதியானது, வெறுமனே 6 சதவீதமாகவே காணப்பட்டது. எனினும் அவ்வரிச்சலுகை வழங்கப்பட்டதன் பின்னர் 2016 - 2019 வரையான காலப்பகுதியில் ஏற்றுமதிகள் 28 சதவீதமாக வளர்ச்சிபெற்றது.

எமது நாட்டிற்கு வழங்கப்படாமல் இருந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மீளப்பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு நானே புருசேல்ஸிற்கு சென்றிருந்தேன். ஏனெனில் அப்போதைய காலகட்டத்தில் பொருளாதார ரீதியான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பை மங்கள சமரவீர என்னிடம் கையளித்திருந்தார். அங்கு சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பின்னர், இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்போது எமக்கு ஆதரவாக 636 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகின. மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவோம் என்றே அப்போது நாம் வாக்களித்தோம். அதன்படி அக்காலத்தில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கான நல்லாட்சி அரசாங்கம் என்ற அடிப்படையில் நாம் புதிய சட்டங்களையும் கட்டமைப்புக்களையும் உருவாக்கினோம். காணாமல்போனோர் பற்றிய அலுவலக சட்டத்தையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தையும் உருவாக்கினோம்.

ஆனால் 2019 ஆம் ஆண்டின் பின்னர் என்ன நடந்தது? தற்போதைய அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தை முழுமையாகப் புறக்கணித்தது. நாடு படிப்படியாக இராணுவமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பேசப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமது எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனின், மக்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரஜைகளின் சுதந்திரத்தில் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும். அதிகாரங்களை ஓரிடத்தில் குவித்து, படிப்படியாக இராணுவமயமாக்குவதைத் தவிர்க்க வேண்டும். 

ஆனால் எந்தவொரு சலுகைகளும் வாய்ப்புக்களும் இல்லாமல்போனாலும் பிரச்சினையில்லை. எனினும் எமது கைகளிலேயே அதிகாரம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் உரிமைகளை நிறைவேற்றும் பட்சத்தில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தானாகவே எமக்குக் கிடைக்கும். அந்தச் சலுகை இருப்பதென்பது தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீட்சிபெறுவதற்குப் பெரிதும் உதவும் என்றார்.

No comments:

Post a Comment