இலங்கையில் பிளாஸ்டிக் பாவனையை முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கை, மாற்று தயாரிப்பு இனங்காணப்பட்டுள்ளது - அமைச்சர் மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

இலங்கையில் பிளாஸ்டிக் பாவனையை முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கை, மாற்று தயாரிப்பு இனங்காணப்பட்டுள்ளது - அமைச்சர் மஹிந்த அமரவீர

எம்.மனோசித்ரா

இலங்கையில் பிளாஸ்டிக் பாவனையை முற்றாக கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும். அதற்கமைய மேலும் பல பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன் என்பவற்றை தடை செய்வதற்கான யோசனை எதிர்வரும் இரு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆடைகளை பொதியிடுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், ஒரு தடவை மாத்திரம் உபயோகிக்கக் கூடிய சிறு கரண்டிகள், உணவு பொதியிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பெட்டிகள், யோகட் உள்ளிட்டவற்றில் காணப்படும் சிறிய கரண்டிகள், குளிர்பானத்துடன் வழங்கப்படும் சிறு குழாய்கள், இடியப்பம் சமைப்பதற்கு உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் மலர்மாலைகள் உள்ளிட்டவற்றை தடை செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

தற்போது இலங்கையில் நாளொன்றுக்கு 20 இலட்சம் பொலித்தீன் பைகள் உபயோகிக்கப்படுகின்றன. இவற்றில் சிறிய அளவிலானவற்றை முதற்கட்டமாகவும் பெரிய பைகளை அதன் பின்னரும் தடை செய்ய எதிர்பார்த்துள்ளோம். இதேவேளை சிறியளவிலான பிளாஸ்டிக் நீர் போத்தல்களை தடை செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தடை செய்யப்படவுள்ள பொருட்களுக்கான மாற்று தயாரிப்புக்களும் இனங்காணப்பட்டுள்ளது. கடதாசியில் தயாரிக்கப்படும் உணவு பொதியிடும் பெட்டிகள், மரப்பலகையில் தயாரிக்கப்படும் சிறு கரண்டிகள் என்பவை மாற்று தயாரிப்புக்களாகக் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் காணப்படும் பொருட்கள் தொடர்பான பட்டியல் எம்மிடமுள்ளன. இவற்றில் அதிகளவானவை பிளாஸ்டிக் ஆகும். இதுவரையில் கரையொதுங்கி கொள்கலன்களில் சேகரிக்கப்பட்டுள்ளவையும் பிளாஸ்டிக் பொருட்களேயாகும். இவை இரு நிறுவனங்களால் 3 மாதங்களுக்கு உபயோகிப்பதற்கு மாத்திரம் கொண்டு வரப்படப்பட்டவையாகும். இவற்றில் பெரும்பாலானவை கடலில் கலந்திருக்கக் கூடும். ஏனையவை மீன்களின் உடலுக்குள் சென்றிருக்கும்.

இரு நிறுவனங்களால் மாத்திரம் இந்தளவு பாரிய தொகை பிளாஸ்டிக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றால், இலங்கையில் இயங்கும் 8 நிறுவனங்களும் வருடாந்தம் எந்தளவு பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்யும் என்று மதிப்பிட முடியும். இவ்வாறு உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடலிலும் நீர் நிலைகளிலும் வாவிகளிலும் நிலத்திலும் கலக்கும். இவற்றினால் நூற்றாண்டு காலத்திற்கு மீள முடியாத பாரிய சூழல் மாசு ஏற்படும்.

எனவே வினைத்திறனான வேலைத்திட்டங்கள் ஊடாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த வேலைதிட்டங்களை கட்டம் கட்டமாக செயற்படுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment