அரசாங்கம் வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளை புறந்தள்ளி, கொரோனா தொற்றிலும் அரசியல் செய்ய முற்பட்டதாலே கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது - ருவன் விஜேவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

அரசாங்கம் வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளை புறந்தள்ளி, கொரோனா தொற்றிலும் அரசியல் செய்ய முற்பட்டதாலே கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது - ருவன் விஜேவர்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு, அரசாங்கம் கொரோனா தொற்றிலும் அரசியல் செய்ய முற்பட்டதாலே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. அதனால் தற்போதாவது அரசாங்கம் மக்களின் உயிரை கருத்திற்கொண்டு சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

கொவிட் வைரஸை கட்டுப்படுத்துவது உட்பட அரசாங்கத்தின் அண்மைகால நடவடிக்கைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், வைரஸ் தொடர்பான விசேட நிபுணர் ஒருவர் அரச தரப்பில் இருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண வைரஸ் தொடர்பான சிறந்த நிபுணராவார். ஆனால் வைரஸ் தொடர்பில் இவரின் ஆலோசனைகளை அரசாங்கம் கண்டுகொள்வதாக தெரிவதில்லை. வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு, அரசாங்கம் கொரோனா தொற்றிலும் அரசியல் செய்ய முற்பட்டதாலேயே தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

அத்துடன் நோய் தொற்று ஒன்றை கட்டுப்படுத்துவதாக இருந்தால் அது தொடர்பான துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்பது சிறு பிள்ளைகளுக்கும் விளங்குகின்ற விடயமாகும். ஆனால் அரசாங்கம் நாயின் வேலையை கழுதை செய்வதுபோல், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும் அரசியலை அதற்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றது. இதன் இறுதி பெறுபேறு மக்கள் தங்களின் உயிர்களின் மூலம் நஷ்டயீடு செலுத்தும் நிலையே ஏற்படும்.

மேலும் சிவில் யுத்தம் ஒன்றுக்கு முகம்கொடுப்பதுபோல், தொற்று நிலைமையொன்றுக்கு முகம்கொடுக்க முடியாது. யுத்தம் ஒன்றின்போது, எதிரி அரசியல்வாதிகளுக்கு காணும் வகையில் இருந்தாலும், வைரஸின் செயற்பாடுகளை கண்டுகொள்ள அரசியல்வாதிகளுக்கு முடியாது. அதனால் வைரஸின் செயற்பாடுகள் தொடர்பில் அறிந்த சுகாதார விசேட நிபுணர்களுக்கு வைரஸுடன் போராட இடமளியுங்கள். என்றாலும் அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வதை காணக்கூடியதாக இல்லை. 

ஏனெனில் மொரட்டுவ மேயர், தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்காக தனது ஆதரவாளர்களுக்கு மாத்திரம், பற்றுசீட்டு வழங்கி, செயற்பட்டவிதம் இதற்கு ஒரு உதாரணமாகும். நாட்டில் தொற்று நோய் பரவும் நிலையில் மக்களை பிளவுப்படுத்தி செயற்படுவதை ஒரு நாகரிகமான சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை.

அத்துடன் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றிக்கொள்ள தவறிய 6 இலட்சம் பேர் வரை இருக்கின்றனர். அந்த மக்களுக்கான தடுப்பூசி எவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் என அரசாங்கம் இதுவரை தெளிவான அறிவிப்பொன்றை மேற்கொள்ளவில்லை. குறைந்த பட்சம் கிராமங்களில் இருக்கும் மரண சகாய நிதி சங்கங்கள் கூட தற்போதைய அரசாங்கத்தை விட பொறுப்புடன் செயற்படுகின்றன .

மேலும் எஸ்க்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பற்றியதால் சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு பல சந்ததியினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சமுத்திர ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நச்சுத்தன்மை கலந்த புகை சுற்றுப்புற சூழலுக்கு சென்றதால் எதிர்காலத்தில் அமில மழை கூட பெய்யலாம் என விசேட நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று மீன்பிடி சமூகத்தினருக்கு தொழிலுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

ஒரு இரசாயன பொருளால் ஏற்படும் தீயை கட்டுப்படுத்த, நீரை பயன்படுத்துவது பொருத்தம் இல்லை என்பது சாதாரண தரத்தில் விஞ்ஞான கல்வியை கற்கும் மாணவருக்குக்கூட தெரிந்த விடயமாகும். 

கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு நீரை பயன்படுத்தியதால், அங்கிருந்த நைட்ரிக் அமிலம் கடல் நீரில் கலந்திருப்பதாக சமுத்திர ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒன்று தேவையா? என கேட்கின்றோம்.

எனவே நாங்கள் அனைவரும் தற்போது கட்சி, நிரம், பேதங்களை மறந்து, கொரோனா தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாத்துக் கொள்ள செயற்பட வேண்டும். அதற்காக அரசாங்கம் தற்போதாவது அரசியல் ஆணவத்தை புறந்தள்ளிவிட்டு, சரியான ஆலோசனைகளை ஏற்று செயற்படுத்தும் மனோபாவத்தை பெறவேண்டும்.

மேலும் கொரோனா தொற்று ஆரம்பத்திலேயே, இதனை கட்டுப்படுத்துவதற்கு செயற்படுத்த வேண்டிய ஆலோசனைகளை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். அந்த ஆலோசனைகளை கேட்டிருந்தாலும், அந்தளவு பேரழிவை நோக்கி சென்றிருக்காது என்பது நாட்டில் இருக்கும் புத்திஜீவிகளின் நிலைப்பாடாகும். 

இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்காக அர்ப்பணிப்பு செய்த மஹா சங்கத்தினர், இன்று தெரிவிக்கும் விடயங்களை பார்த்தாலே அரசாங்கத்தின் வீழ்ச்சியை விளங்கிக் கொள்ள போதுமானதாகும். எனவே தற்போதாவது அரசாங்கம் மக்களின் உயிரை கருத்திற்கொண்டு சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment