(இராஜதுரை ஹஷான்)
நாட்டின் நிதி நிலைமை ஸ்தீரத்தன்மையினை இழந்துள்ளது. நிதி முகாமைத்துவம் குறித்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் அனைத்து தரப்பினரது ஆலோசனைகளையும் பெற வேண்டும். 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் கண்மூடித்தனமாக பல சேவைகளின் மீதான வரிகள் குறைக்கப்பட்டன, வரி சலுகை வழங்கப்பட்டன. இதனால் சாதாரண நடுத்தர மக்கள் நன்மையடையவில்லை. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் மக்கள் தொடர்ந்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் மிகவும் மோசமான நிதி நெருக்கடியினை எதிர்க் கொண்டுள்ளோம். பொருத்தமற்ற நிதி முகாமைத்துவ கொள்கையினால் நாட்டின் கடன் சுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறுகிய கால உயர் வட்டியில் முதலீடுகளை செய்வது பெரும் தவறாக காணப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு பல்வேறு வரி நிவாரணங்கள் வழங்கப்பட்டது. அத்துடன் எவ்விதமான தூரநோக்கமின்றி வரிச்சலுகை வழங்கப்பட்டன. இதனால் இன்று பொருளாதார மட்டத்தில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.
வரி குறைப்பின் விளைவாக மத்திய வங்கி பொதுத்துறை கடனை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 109.7 சதவீதமாக பதிவு செய்தது.இதனை வரலாற்றில் மிக உயர்ந்த மதிப்பாக கருத வேண்டும்.
தற்போதைய நிதிக் கொள்கையின் கீழ் பொது கடனை மேலும் அதிகரிப்பது தவிர்க்க முடியாத நிலை தோற்றம் பெறும். இவ்வாறான நிலைமை நாட்டின் நாணய கொள்கையினை பாரிய ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும்.
முறையற்ற நிதி முகாமைத்துவத்தின் காரணமாக இலங்கை அங்கோலா, ஆர்ஜென்டினா, மொசாம்பிக், காங்கோ, எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் நிதி நிலை தன்மைக்கு வீழ்ச்சியடையும்.
பொருளாதார அபிவிருத்திக்காகவும், கடன் திருப்பி செலுத்துவதற்காகவும் வெளிநாட்டு கடன்களை பெற முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்வரும் காலங்களில் சர்வதேசத்திற்கு ஆண்டுக்கு 6-7 பில்லயன் அமெரிக்க டொலர்களை கடனாகவும், வட்டியாகவும் செலுத்த நேரிடும்.
நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் கண்மூடித்தனமான நாணயத்தை அச்சிடுகிறது. 2020 ஆம் ஆண்டு 650 பில்லியனும், இவ்வருடத்தின் முதல் காலாண்டில் 169 பில்லியனும் அச்சிடப்பட்டுள்ளன. அதிக நாணயத்தை அச்சிடுவதன் விளைவை நாட்டு மக்கள் தற்போது எதிர் கொண்டுள்ளார்கள். மேலும் மாற்று வீதம் மேலும் மதிப்பிழக்கும் அபாயத்தில் உள்ளது. இவ்வாறான தன்மை எதிர்வரும் மாதங்களில் தீவிரமடையும்.
நாட்டின் நிதி நிலைமை ஸ்தீரத்தன்மை அடைவது அவசியமர்கும். 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர் பல்வேறு துறைகளில் வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் மற்றும் வரிச்சலுகை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அரச வருவாயை படிப்படியாக அதிகரிக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடு நாட்டின் பொது நிதி மீது உள்ளுர் மற்றும் தேசிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
நிதி ஸ்தீரத்தன்மையிறையை முறையாக பேணினால் கண்மூடித்தனமாக நாணயம் அச்சீடு செய்யும் தேவையினை குறைக்கும். அத்துடன் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வழி வகுக்கம். கடன் மறுசீரமைப்பு என்பது நியாயமான நிதி கட்டமைப்பை முன்வைத்து கடன் வழங்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளுக்கு திருப்பி செலுத்த உகந்த வகையில் செயற்பட வேண்டும்.
No comments:
Post a Comment