(எம்.மனோசித்ரா)
இலங்கையில் இதுவரையில் காணப்பட்ட நிலைமைகளின் அடிப்படையில் செய்யப்பட்ட மதிப்பீட்டுக்கமைய நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சியை அவதானிக்க முடிகிறது. எவ்வாறிருப்பினும் எதிர்வரும் சில நாட்களில் தொற்றாளர் எண்ணிக்கையில் சிறு அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த, எவ்வாறிருப்பினும் மேலும் சில நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே நிலைமையை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவிற்கு சமமாக நாளொன்றில் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையின் சனத் தொகையுடன் ஒப்பிடும் போது உயர்வாகவுள்ளதாக சர்வதேச ரீதியில் தொகுக்கப்பட்ட தகவல்களிலிருந்து தெரியவருகிறது.
இலங்கையில் எதிர்பாராத விதமாக மூன்றாம் அலையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மூம்மடங்காக அதிகரித்தது. எனினும் தொடர்ந்தும் இவ்வாறு தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் காணப்பட்ட நிலைமைகளின் அடிப்படையில் செய்யப்பட்ட மதிப்பீட்டுக்கமைய நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சியை அவதானிக்க முடிகிறது. எவ்வாறிருப்பினும் எதிர்வரும் சில நாட்களில் தொற்றாளர் எண்ணிக்கையில் சிறு அதிகரிப்பை அவதானிகக் கூடியதாகவிருக்கும்.
போக்குவரத்து கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னர் சுமார் கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு 3500 தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலை காணப்பட்டது.
எனவே கொவிட் பரவல் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்காவிட்டால் தற்போது அந்த எண்ணிக்கை பன் மடங்காக அதிகரித்திருக்கும். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. ஆரம்பத்துடன் ஒப்பிடும் போது தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்த போக்கினையே காண்பிக்கின்றன.
எனவே போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு கால அவகாசம் தேவையாகும். எவ்வாறிருப்பினும் மேலும் சில நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே நிலைமையை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றார்.
No comments:
Post a Comment