(எம்.எப்.எம்.பஸீர்)
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கே மீள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டி.யினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த மேலும் மூவர் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர், சார்ஜன், கான்ஸ்டபிள் இவ்வாறு சி.ஐ.டி.யினரால் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர்.
மேலும், குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக அவர்களை ஆஜர் செய்து சி.ஐ.டி. அதிகாரிகள் நீதிமன்றுக்கு தெரிவித்தனர். இந்நிலையிலேயே அம்மூவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே சுமார் 20 பேர் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே நேற்று மேலும் மூவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதனைவிட மேலும் 8 பேர் வரை (போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொலிசார் உட்பட) தடுப்புக் காவலில் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2020 ஜூன் மாதம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு தென் மாகாணத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சுமார் நூறு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மீள போதைப் பொருள் வர்த்தகர் ஒருவருக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய சி.ஐ.டி.விசாரணைகளை ஆரம்பித்தது.
அப்போதைய சி.ஐ.டி. பிரதானி பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் கீழ் அப்போதைய அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனைக்கமைய விசாரணை செய்யும் பொறுப்பு சி.ஐ.டி.யின் விசேட விசாரணை பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த 2020 ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை ஆரம்பத்தில் மினுவங்கொட பொலிஸ் நிலைய அப்போதைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஹான் மஹேஸ் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையொன்றின் போது ஐந்து கிராம் ஹெரோயினுடன் 'டையில் சமிந்த' எனப்படும் சமிந்த தயா பிரியான் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது ரிபீட்டர் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதுடன், திவுலப்பிட்டிய பகுதி தனியார் வங்கியொன்றினூடாக இலட்சக்கணக்கான பணம் பரிமாற்றப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போது சி.ஐ.டி. யால் கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சுற்றிவளைப்பு பிரிவு குழுவொன்றின் பிரதானி விசாரணை என்ற பெயரில் டையில் சமிந்தவை சந்திக்க மினுவங்கொடை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
இதன்போது 'உனக்கு 100 கிலோ ஹெரோயின் வெள்ளை நிற வேன் ஒன்றில் வந்துள்ளதே. அந்த பொருள் எங்கே? ' என டையில் சமிந்தவிடம் விசாரித்துள்ளார். இதன்போது டையில் சமிந்த ஆச்சரியத்துடன் 'அன்று சேரின் குழுவினர்தானே பொருட்களை கொண்டு வந்தீர்கள்' என தெரிவித்துள்ளார்.
அந்த கேள்வியை எதிர்பாராத குறித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யாது பொலிஸார் இரு நாட்கள் தடுத்து வைத்துள்ளதாக பதிவொன்றினையிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மற்றொரு பொலிஸ் குழு மினுவங்கொட பொலிஸ் நிலையத்துக்குச் சென்று டையில் சமிந்தவுடன் விசாரணைகள் நடத்தியுள்ளது. இதன்போது டையில் சமிந்தவின் தொலைபேசியை கையேற்று நடாத்திய விசாரணைகளில் நீர் கொழும்பு பகுதியில் வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 6 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் முன்னெடுத்த விசாரணையில் அவரது சகோதரரின் வீடொன்றில் பாரிய தொகை போதைப் பொருள் இருப்பதாக தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வீட்டை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு குழு சுற்றிவளைத்த போது அங்கிருந்த போதைப் பொருளை வேன் ஒன்றில் வந்த மூவர் எடுத்துச் சென்றதாக அவ்வீட்டிலிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் சி.சி.ரி.வி. காணொளிகள் பிரகாரம் வேனின் இலக்கத்தை அடையாளம் கண்டு விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது குறித்த வெக்கன் ஆர் ரக வேனானது, வத்தளை பகுதியில் உள்ள வாடகைக்கு வாகனங்களை கையளிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
அங்கு சென்று விசாரணை செய்த போது அந்த வேனானது ஒரு இலட்சம் ரூபா மாத வாடகை அடிப்படையில் முதலில் மினுவங்கொட பொலிஸ் நிலையத்துக்கு டையில் சமிந்தவை சந்திக்கச் சென்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சுற்றிவளைப்பு பிரிவொன்றின் பிரதானியால் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில் தற்போது டுபாயிலுள்ள போதைப் பொருள் வர்த்தகரான கிஹான் பொன்சேகா எனும் நபருக்கும் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் ஒரு குழுவால் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் போதைப் பொருளுக்கும் தொடர்புள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவின் குழு டையில் சமிந்தவுக்கு ஒரு தொகை போதைப் பொருளை கிஹான் பொன்சேக்காவின் ஆலோசனைக்கமைய பொல்வத்தை பகுதியில் வைத்து கையளித்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி இந்த தகவல்களை மையப்படுத்தி இது குறித்த ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க சி.ஐ.டி.க்கு உத்தரவிடுமாறு போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அப்போதைய பிரதானி பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ மெதவத்த, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் கோரிக்கை முன் வைத்திருந்தார் . அதன்படியே சி.ஐ.டி.யும் தேசிய உளவுத்துறையும் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment