தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது, கூட்டமைப்பு தேசிய பிரச்சினைகளில் அக்கறை கொள்ளவில்லை : ரொஷான் ரணசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 22, 2021

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது, கூட்டமைப்பு தேசிய பிரச்சினைகளில் அக்கறை கொள்ளவில்லை : ரொஷான் ரணசிங்க

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அக்காலக்கட்டத்தில் தேசிய பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்ளவில்லை என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். அதற்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக அந்நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார பாதுகாப்பான சூழல் தற்போது கிடையாது என்பதை அனைத்து தரப்பினரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை திட்டமிட்டு பிற்போட்டது. அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. 2015 - 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்டது. அக்காலகட்டத்தில் கூட்டமைப்பு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய பிரச்சினைகள் குறித்து எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பாதுகாப்பான சூழல் உறுதிப்படுத்தப்பட்டால் நிச்சயம் தேர்தலை நடத்துவோம். தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.

No comments:

Post a Comment