(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)
பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கு விரைவில் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் டக்லஸ் தேவானந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியமை, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை, கொவிட் தொற்று மற்றும் தற்காலத்தில் மீன் உட்கொள்ள பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சம் போன்ற காரணங்களால் கடற்றொழிலாளர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக தங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் கப்பல் தீப்பற்றியமையால் கடற்தொழில் பாதிக்கப்பட்டுள்ளமையால் அதற்கான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
ஆனால் அரசாங்கம் இதுவரைக்கும் கடற்றொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டிருக்கின்றது. அதுவும் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரிவினருக்கே வழங்கப்பட்டிருக்கின்றது. என்றாலும் கடற்தொழிலாளர்கள் தங்களுக்கு நாளொன்றுக்கு இரண்டாயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என கோரி இருக்கின்றனர். இது தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் டக்லஸ் தேவானந்த தொடர்ந்து தெரிவிக்கையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்படும்போது டீசல் விலையை 35 ரூபாவால் அதிகரிப்பதற்கே தீர்மானிக்கப்பட்டது. என்றாலும் எமது அமைச்சு பெற்றோலிய அமைச்சுடன் கலந்துரையாடி 7 ரூபா வரை அதனை குறைத்து 22 ரூபா மானியம் வழங்கி இருக்கின்றோம். அந்த 7 ரூபா தொடர்பாகவும் நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம்.
அதேபோன்று கப்பல் தீப்பற்றியமையால் பாதிக்கப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
கப்பல் நிறுவனத்தினால் முதல் கட்டமாக ஒரு தொகை நஷ்டஈடு விரைவில் கிடைக்கும். அது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி அவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பாேம்.
அத்துடன் மீன் உட்கொள்ள பயப்பட தேவையில்லை. மக்கள் அச்சப்படாமல் மீன் ஆகாரத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment