(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க 30 பில்லியன் நிதி ஒத்துக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு நிவாரண நிதி மாத்திரமே வழங்கப்படும். ஆகவே பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். 5,000 ரூபா நிவாரண நிதியை பெறுவதற்கு தகுதி இருந்தும் நிதியை பெறாதவர்கள் பிரதேச செயலக பிரிவிற்கு தெரிவிக்கலாம் அல்லது 1965 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு முறையிடலாம் என சமுர்த்தி, மனைபொருளாதார நுண்நிதி சுயத்தொழில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சமுர்த்தி, மனைப்பொருளாதார மற்றும் நுண்நிதி சுயத்தொழில் இராஜாங்க அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், புதுவருட கொவிட் கொத்தணி தாக்கத்தினை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார ரீதியில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இவர்களுக்கு நாளை முதல் 5000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்படும். இதற்காக 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. கொவிட் வைரஸ் தாக்கத்தின் முதலாம் சுற்றின் போது 50 இலட்ச குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க 25 பில்லியனும், இரண்டாம் சுற்றிள் 50 இலட்ச குடும்பங்களுக்கு சுமார் 25 பில்லியன் நிதியும் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவு செய்யப்பட்ட 30 இலட்ச குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க 15 பில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரமே இம்முறை 5000 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும். கடந்த காலத்தைபோன்று ஒரு குடும்பத்திற்கு 5000 நிவாரண நிதி பல கட்டமைப்பின் அடிப்படையில் வழங்கப்படமாட்டாது. ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபா மாத்திரமே இம்முறை வழங்கப்படும். ஆகவே நிவாரண நிதி வழங்கும் சேவையில் ஈடுபபடும் அரச அதிகாரிகளை பொது மக்கள் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை புரிந்துக் கொள்வது அவசியமாகும் என்றார்.
5 ஆயிரம் ரூபா கிடைக்கும் குடும்பங்களுக்கான வகைப்படுத்தல் குறித்த மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment