பெருநாளைக் கொண்டாடுவது பெருமானார் (ஸல்) காட்டித்தந்த வழிமுறை, மாறாக கறுப்புக்கொடி கட்டுவதோ, துக்கமாக மாற்றுவதோ மார்க்கத்தின் நோக்கத்துக்கு மாறானது - இம்ரான் மகரூப் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

பெருநாளைக் கொண்டாடுவது பெருமானார் (ஸல்) காட்டித்தந்த வழிமுறை, மாறாக கறுப்புக்கொடி கட்டுவதோ, துக்கமாக மாற்றுவதோ மார்க்கத்தின் நோக்கத்துக்கு மாறானது - இம்ரான் மகரூப்

பெருநாளைக் கொண்டாடுவது பெருமானார் (ஸல்) காட்டித்தந்த வழிமுறை. பெருநாள் தினத்தில் என்ன வலிகள் இருந்தாலும், எம் விழிகள் சாரை சாரையாக கண்ணீர் சிந்தினாலும் அந்நாளை கொண்டாட வேண்டும் என்பதை குறைந்தளவிலாவது செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

பெருநாள் என்பது சந்தோஷமாக இருக்கும் நாள். தக்பீர் சொல்வதன் மூலம், தான தர்மங்கள் (ஸகாத்துல் பித்ர்) செய்வதன் மூலம், புத்தாடைகளை அணிவதன் மூலம், தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம், உணவு வகைகளை உண்பதன் மூலம், விளையாடுவதன் மூலம், உறவுகளுக்கும் சிறார்களுக்கும் அன்பளிப்புகளை வழங்குவதன் மூலம் நாம் அந்த நாளில் சந்தோஷமாக இருக்க இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது.

மாறாக நமக்குள்ள வலிகள், துன்பங்கள், துயரங்கள், நோய்நொடிகள், இழப்புகள் எல்லாம் பெருநாளை மறுத்து மகிழ்வாக இருக்க வேண்டிய தருணத்தை நாம் புறக்கணித்து செல்ல தூண்டுமாயின் அது மார்க்க வழிகாட்டலுக்கு மாறானதாகும்.

நின்று தொழ முடியாதவர்கள் அமர்ந்தோ சாய்ந்தோ படுத்தோ தொழுகையை நிலைநாட்டுவது போல பெருநாள் கொண்டாட்டம் எனும் சந்தோஷத்தையும் நாம் வாழும் கால சூழ்நிலைகளுக்கேற்ப குறைத்து, அனுசரித்து கொண்டாடுவது கட்டாயமாகும். 

மாறாக பெருநாளைக்கு கறுப்புக்கொடி கட்டுவதோ இயன்றளவு சந்தோஷமாக இருக்கும்படி வேண்டப்பட்ட தருணத்தை துக்கமாக மாற்றுவதோ மார்க்கத்தின் நோக்கத்துக்கு மாறானதாகும்.

எம்மை மாத்திரமன்றி முழு உலகையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா பரவல் எம் பெருநாள் சூழலை மாற்றி அமைத்துள்ளது என்பது கசப்பான உண்மைதான். அதற்காக அது எம் சந்தோஷத்தையும் பறிக்க நாம் இடமளிக்க தேவையில்லை. கால சூழல் வேண்டிநிற்கும் வகையில் எம் பெருநாளைக் கொண்டாடுவோம்.

பொறுப்பற்ற அரசின் போக்கால் விஸ்வரூபம் கண்ட கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து எம்பெருநாளை அமைத்துக் கொள்வோம். 

கொடிய இந்த நோயை எம்மை விட்டு அகலவும் அராஜக இனவாத அரசின் ஆயுள் நீங்கவும் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடும் சகோதரர் ரிஷார்ட் பதியுத்தீன், உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் உள்ளிட்ட அனைத்து கைதிகளும் விடுதலை பெறவும் புனித மஸ்ஜிதுல் அக்ஸாவை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்கவும் பலஸ்தீன் தேசம் சுதந்திரம் பெறவும் இப்புனித நாளில் இருகரம் ஏந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் ஈத் முபாரக்.

No comments:

Post a Comment