அனுமதி பெறாமல் வியாபாரம் செய்யும் நடமாடும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை - அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

அனுமதி பெறாமல் வியாபாரம் செய்யும் நடமாடும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை - அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்

பயணத்தடை அமுலிலுள்ள காலப்பகுதியில் அனுமதி பெறாமல் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகளுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படுமென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

பயணத்தடை அமுலிலுள்ள காலப்பகுதியில் மரக்கறிகள், மீன் வகைகள் மற்றும் பேக்கரி உணவுப் பண்டங்கள் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் உள்ளூர் நடமாடும் வியாபாரிகள் அனுமதி பெறாமல் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அறியமுடிகின்றது.

நடமாடும் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு அனுமதிச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகம் ஊடாக எடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகதத்தில் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பெற்று பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்தியதிகாரி ஊடாக பிரதேச செயலாளரினுாடாக மாவட்ட செயலாளரினால் இதற்கான அனுமதி சான்றிதழ் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார். 

சகல வியாபாரிகளும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வியாபார அனுமதி அட்டையினை பெற வேண்டுமெனவும், நடமாடும் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதோடு, தரித்து நின்று பாதையோரங்களில் விற்பனை செய்தல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

வியாபார நடவடிக்கையின் போது கையுறை, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகள் கட்டாயம் பேணப்படல் வேண்டுமெனவும், தவறுபவர்களின் அனுமதி இரத்துச் செய்யப்படுமெனவும் தெரிவித்தார்.

வியாபாரிகள் கட்டாயம் தங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கையினை பெற்றிருத்தல் வேண்டுமெனவும் அறிவித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

குறித்த நிபந்தனைகளை மீறிச் செயற்படும் வியாபாரிகளுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad