ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அரசிற்கு கால அவகாசம் வழங்கியது ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அரசிற்கு கால அவகாசம் வழங்கியது ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம்

(நா.தனுஜா)

அரச ஊழியர்கள் சார்ந்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய 5 கோரிக்கைகளை முன்வைத்திருக்கும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம், இம்மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னதாக இவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகயில் ஈடுபடவேண்டிய நிலையேற்படும் என்றும் எச்சரித்திருக்கிறது.

இது குறித்த ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அரச ஊழியர்கள் பலரது உயிர்கள் பலியாகியுள்ளன. அவர்களில் அபிவிருத்தி அதிகாரிகள் இருவரும் பட்டதாரி ஒருவரும் அடங்குகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முறையான செயற்திட்டங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படாமையினால் நாட்டு மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நெருக்கடி நிலைக்கு மத்தியில் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள், அவர்களது பணிக்காக அலுவலகங்களுக்கு அழைக்கப்படுகின்றனர்.

எனினும் அவர்கள் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு அவசியமான குறைந்தபட்ச வசதிகள்கூட செய்துகொடுக்கப்படவில்லை. இது இவ்வாறிருக்கையில், அரசாங்கத்தினால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறித்தலொன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

தமது உரிமைகளைக்கோரி முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்துவதற்கு இந்த அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

இந்நிலையில் நாம் மிகவும் அவசியமான சில கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். 

அத்தியாவசிய சேவைகளுக்காக பணிகளுக்கோ அல்லது அலுவலகங்களுக்கோ அழைக்கப்படும் அனைவருக்கும் தடுப்பூசியைப் பெற்றுக் கொடுத்தல்.

சனிட்டைசர் மற்றும் முகக்கவசம் உள்ளடங்கலாக சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளை வழங்குதல்.

அனைத்து ஊழியர்களுக்கும் அவசியமான வாகனப் போக்குவரத்து வசதியை வழங்குதல்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அனைவருக்கும் விசேட கொடுப்பனவை வழங்குதல்.

பாலூட்டும் தாய்மாரைப் பணிக்கு அழைப்பதை இயலுமானவரையில் தவிர்த்தல் ஆகியவையே அந்தக் கோரிக்கைகளாகும்.

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் இன்றையதினம் ஜனாதிபதி உள்ளடங்கலாக, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதேவேளை கடந்த 27 ஆம் திகதி அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான கூட்டமொன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது பணிகளில் ஈடுபடுவோருக்குத் தடுப்பூசி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. எனினும் அவை வெறுமனே ஊடகங்களுக்குக் காண்பிப்பதற்கான வாக்குறுதிகள் மாத்திரமேயாகும். அதன் பின்னரும் கூட அரச சேவையாளர்களுக்குக் குறைந்தபட்சம் முகக்கவசத்தை வழங்குவதற்குக்கூட இதுவரையில் எவ்வித செயற்திட்டங்களும் தயாரிக்கப்படவில்லை.

ஆகவே தற்போது நாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை இம்மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலையேற்படும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad