ரமழான் பண்டிகையை கொண்டாட விடாமல் திட்டமிட்டு அரசாங்கத்தால் இனவாத ரீதியிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

ரமழான் பண்டிகையை கொண்டாட விடாமல் திட்டமிட்டு அரசாங்கத்தால் இனவாத ரீதியிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது - முஜிபுர் ரஹ்மான்

(எம்.மனோசித்ரா)

ஏப்ரல் முதல் வாரத்திலேயே கொவிட் பரவல் தொடர்பில் சுகாதார தரப்பினர் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்த போதிலும், உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் இப்போது ரமழான் பண்டிகையை கொண்டாட விடாமல் திட்டமிட்டு அரசாங்கத்தால் இனவாத ரீதியிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்ககட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலேயே போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சுகாதார தரப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. 

மாறாக 5000 ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு நாட்டு மக்களுக்கு வழங்கி வீடுகளில் இருந்தவர்களையும் வெளியில் நடமாட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் மூலம் வைரஸ் பரவல் தீவிரமடைந்தது.

வைரஸ் பரவல் தீவிரமடைய ஆரம்பித்த கால கட்டத்திலேயே போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தால் இன்று இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்காது. எனினும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என்று கூறினர்.

ரமழான் பண்டிகையை கொண்டாட விடாமலாக்குவதற்கு திட்டமிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியாக இன்றி, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இனவாத ரீதியில் அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது. இவ்வாறு இனவாத ரீதியிலேயே அரசாங்கம் சென்று கொண்டிருந்தால் நாடு பெரும் பின்னடைவையே சந்திக்கும் என்றார்.

No comments:

Post a Comment