கண்காணிப்பு நடவடிக்கையில் 20 ஆயிரம் பொலிஸார் கடமையில், தேவையற்ற விதத்தில் எவரும் வெளியில் நடமாட முடியாது - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

கண்காணிப்பு நடவடிக்கையில் 20 ஆயிரம் பொலிஸார் கடமையில், தேவையற்ற விதத்தில் எவரும் வெளியில் நடமாட முடியாது

(செ.தேன்மொழி)

முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 20 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து கட்டுபாட்டு சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் குற்றவியல் சட்ட விதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

போக்குவரத்து கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்பதுடன், மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்படுமென பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, நேற்று 13ஆம் திகதி இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். எந்தவொரு வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட முடியாது. அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்.

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே போக்குவரத்தை மேற்கொள்ள முடியும். வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்படும். பார்மசிகள் ஊடாக மருந்துப் பொருட்களை விநியோகிக்க முடியும் என்பதுடன், விநியோகத்திற்கான போக்குவரத்து சேவைக்கும் அனுமதியளிக்கப்படும். 

அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின்படி வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்த உத்தரவு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் செல்லுப்படியாகாது. போக்குவரத்து கட்டுப்பாடு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களிலேயே இந்த நடைமுறை பின்பற்றப்படும். 

ஆகவே, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக போக்குவரத்துக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

 திருமண நிகழ்வுகளை நடத்த முடியாது. பதிவுத் திருமணம் செய்வதாக இருந்தால் பதிவாளர், சாட்சியாளர்கள் உட்பட 15 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். வெளியாட்களை அழைக்க முடியாது.

 கொவிட்-19 அல்லாத மரணங்கள் இடம்பெற்றால் இறுதிக்கிரியைகள் 24 மணி நேரத்துக்குள் நடைபெற வேண்டும். 15 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.

 பொதுப் போக்குவரத்து சேவையில் ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி.

 வாடகை வாகனங்களில் சாரதியுடன் இரண்டு பேர் மாத்திரமே பயணிக்க முடியும்.

 அமைச்சின் செயலாளரின் சுற்றுநிரூபத்திற்கு அமைவாகவே அரச நிறுவனங்களில் செயற்பாடு.

 தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊழியர்கள் மற்றும் வீட்டிலிருந்து கடமையாற்றும் வசதிகளுடன் பணிகளை முன்னெடுக்கலாம்.

 அவசியக் கூட்டங்கள் 10 பேருடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும். செயலமர்வுகள், மாநாடுகளுக்கு அனுமதியில்லை.

 சில்லறைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், கடைத் தொகுதிகள், சந்தைகள், பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் வங்கிகளின் இட வசதியில் 25 வீதமானோருக்கே அனுமதி.

 பேக்கரி, வீதியோரக் கடைகள், அழகுசாதன நிலையங்களில் இட வசதியின் பிரகாரம் 25 வீதமானோருக்கே உட்பிரவேச அனுமதி.

 பராமரிப்பு நிலையங்கள், பாலர் வகுப்புகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வகுப்புகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

 வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரட்டைப் பிரஜாவுரிமையுடையோர், வெளிநாட்டவர்கள், இராஜதந்திரிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது கட்டாயம்.

 ஒற்றை இலக்கம் உடைய நாளாக இருந்தால் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 1,3,5,7,9 என இருப்பவர்கள் வெளியே வரலாம். நாளை 13 ஆம் திகதி மேற்படி நபர்கள் வெளியே வரமுடியும்.

 இரட்டை இலக்கம் உடைய நாளாக இருந்தால் 2,4,6,8 ஆகிய இலக்கமுடையவர்கள் வரமுடியும். இறுதி இலக்கம் 0 ஆக இருந்தால் அது இரட்டை நாளுக்குரிய இலக்கமாக கருதப்படும்.

 எனவே, வெளியே வருபவர்கள் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும். தேசிய அடையாள அட்டை இல்லாதபட்சத்திலேயே கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்த முடியும்.

 அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பவர்கள், தொழிலுக்கு செல்லும் அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்நடைமுறை பொருந்தாது. பொருட்கள் கொள்வனவு உட்பட இதர விடயங்களுக்காக வருபவர்களுக்கே பொருந்தும்.

 அதேவேளை, கர்ப்பிணி பெண்கள், இருதய நோயாளிகள் உட்பட அத்தியாவசிய தேவை நிமித்தம் வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கும் இந்நடைமுறை பொருந்தாது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment