சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல் - ஒருவர் பலி, அறுவர் காயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல் - ஒருவர் பலி, அறுவர் காயம்

மத்திய தரைக்கடலை ஒட்டிய துறைமுக நகரான லடகியா உட்பட வட கிழக்கு சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை சிரிய வான் பாதுகாப்பு முறை இடைமறித்துள்ளது. இதன்போது ஒருவர் கொல்லப்பட்டு ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேல் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் ஹிபா, லடக்கியா நகரின் கிழக்கு பகுதி மற்றும் ஹமா மாகாணத்தில் மஸ்யாப் பகுதிகளும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. 

தெற்கு லடக்கியா மற்றும் ஏனைய கரையோர பகுதிகள் மீது அதிகாலை 2.18 மணியளவில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக சிரிய இராணுவத் தரப்பை மேற்கோள்காட்டி அந்நாட்டு சானா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

‘ஏவுகணை தாக்குதல்களை எமது வான் பாதுகாப்பு பிரிவு எதிர்கொண்டதோடு அவற்றில் சிலவற்றை சுட்டு வீழ்த்தின’ என்று இராணுவம் சார்பில் பேசவல்ல ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒரு ஏவுகணை சிவிலியன்களின் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் விழுந்து பொருட் சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக அரச ஊடகம் தெரிவித்தது. 

இதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட காயமடைந்த அனைவரும் பொதுமக்கள் என்று சானா செய்தி நிறுவனம் தெரிவித்தது. லடக்கியா சிரிய அரசின் கோட்டையாக இருப்பதோடு அது ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் பூர்வீக பூமியாகும்.

எனினும் இந்தத் தாக்குதல் பற்றி இஸ்ரேல் தரப்பில் உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. சிரியாவில் ஈரானுடன் தொடர்புபட்ட போராளிகளை இலக்கு வைப்பதாகக் கூறி இஸ்ரேல் கடந்த பல ஆண்டுகளில் சிரியா மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது. எனினும் அது பற்றி இஸ்ரேல் மிக அரிதாகவே வெளி உலகிடம் கூறுகிறது.

சிரியாவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பட்டங்கள் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்ட நிலையில் அங்கு வெடித்த உள்நாட்டுப் போரில் சிரிய அரசின் நெருங்கிய கூட்டாளியாக ஈரான் உள்ளது.

அண்டை நாடான சிரியாவில் இருந்து ஈரானிய படைகளை வெளியேற்றுவதே தமது இலக்கு என்று இஸ்ரேல் கூறி வரும் நிலையில் அது சிரியா மீது நடத்தும் தாக்குதல்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன.

No comments:

Post a Comment