பணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி : இலங்கை மத்திய வங்கி - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

பணவீக்கம் ஏப்ரலில் 3.9 சதவீதமாக வீழ்ச்சி : இலங்கை மத்திய வங்கி

(நா.தனுஜா)

நாட்டின் பொருளாதார நிலவரத்தைப் பொறுத்தவரை, கடந்த மார்ச் மாதம் 4.1 சதவீதத்திலிருந்த பணவீக்கம், ஏப்ரலில் 3.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 மார்ச்சில் 4.1 சதவீதத்திலிருந்து 2021 ஏப்ரலில் 3.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இது உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த வீழ்ச்சிகள் மூலம் தூண்டப்பட்டிருந்தது.

அதேவேளை, உணவு பணவீக்கமானது 2021 மார்ச்சின் 9.6 சதவீதத்திலிருந்து 2021 ஏப்ரலில் 9.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன் உணவல்லாப்பணவீக்கம் 2021 ஏப்ரலில் 1.8 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மார்ச்சின் 4.0 சதவீதத்திலிருந்து 2021 ஏப்ரலில் 3.9 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2021 ஏப்ரலில் சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது. இதற்கு உணவு வகைப் பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை வீழ்ச்சிகளே காரணமாகும். 

உணவு வகையினுள் தேங்காய், காய்கறிகள், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்பவற்றின் விலைகள் 2021 ஏப்ரலில் வீழ்ச்சியடைந்தன. 

அதேவேளை, உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் மாத காலப்பகுதியில் அதிகரிப்பொன்றினைப் பதிவு செய்தமைக்குப் போக்குவரத்து துணை வகையில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களே முக்கிய காரணமாகும்.

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கமானது 2021 மார்ச்சின் 3.1 சதவீதத்திலிருந்து 2021 ஏப்ரலில் 3.0 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது. 

அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப்பணவீக்கம் 2021 ஏப்ரலில் 3.0 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment