இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பான சுற்றுலாத்துறையை பேர்ள் கப்பல் கேள்விக்குறியாக்கியுள்ளது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பான சுற்றுலாத்துறையை பேர்ள் கப்பல் கேள்விக்குறியாக்கியுள்ளது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்

இராஜதுரை ஹஷான்

கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் 9.5 கிலோ மீற்றர் தொலைவில் தீ பரவல் விபத்துக்குள்ளாகியுள்ள பேர்ள் கப்பலினால் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை இத்தீப்பரவல் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. தோற்றம் பெறவுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு சர்வதேச சட்டத்திற்கு அமைய தீர்வுகாண துரிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

நாட்டின் கடற்பரப்பிற்குள் தீ விபத்துக்குள்ளாகியுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எக்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்து குறித்து மாறுபட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. கடற்பரப்பில் சர்வதேச கப்பல்கள் விபத்துக்குள்ளாகுவதும், அதனால் கடல் மற்றும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதும் இதொன்றும் முதல் தடவையல்ல.

இக்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு ஒப்பீட்டளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சுற்றுலாத்துறை சேவைக் கைத்தொழில் காணப்படுகிறது. கொவிட்-19 வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சேவை இத்தீப்பரவலால் பாதிக்கப்படும்.

நீர்கொழும்பு பகுதி அழகிய கடற்கரைகளுடன் கூடிய பிரபல்யமான சுற்றுலாத்தளம் மட்டுமன்றி பெருமளவிலான மீனவர்கள் வாழும் மீன்பிடி கிராமமாகும். எனவே இந்த தீ விபத்து கடல் வாழ் உயிரினங்களை மாத்திரமன்றி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. 

பேருவளை தொடக்கம் நீர் கொழும்பு கடற்கரை வரையிலான பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் மற்றும் மீனவ தொழிலுடன் ஒன்றினைந்த 28 குடிசைக் கைத்தொழிலில் ஈடுப்படுபவர்களுக்கும் நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கிழக்கு கடற்பரப்பில் சர்வதேச கப்பல் ஒன்றும் தீ விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு உரிய நஷ்டஈடு பெற்றுக் கொள்ளப்பட்டது.

இக்கப்பலில் ஏற்பட்ட பாதிப்பை காட்டிலும் தற்போது எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பண்மடங்காகும். ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் இதர துறைசார் பாதிப்புக்களை தற்போதைய சூழ்நிலையில் மதிப்பீடு செய்ய முடியாத தன்மை காணப்படுகிறது.

பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நஷ்டஈடு பெற்றுக் கொள்ள முடியும். அதற்கான நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு அமைய தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்விடயத்தில் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. தீ பரவலினால் சமுத்திர வளத்திற்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குறுகிய காலத்திற்குள் மதிப்பீடு செய்ய முடியாது.

ஆகையால் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான இக்கப்பலின் நிறுவனத்திடமிருந்து முதல் கட்ட நஷ்டஈட்டினை பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் பெருந்தொற்றினால் பூகோளிய மட்டத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே நாட்டின் தேசிய பொருளாதாரத்தை நெருக்கடியான சூழ்நிலையில் மேலும் நெருக்கடிக்குள்ளாக்காத வகையில் செயற்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாக காணப்படுகிறது.

கொவிட்-19 வைரஸ் பெருந்தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய பொருளாதாரத்திற்கு முன்னிலையில் வலு சேர்க்கும் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிமுகப்படுத்தப்பட்டு அச்சேவைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும் இச் சேவைகளினால் மாத்திரம் தேசிய பொருளாதரத்தை வலுப்படுத்த முடியாது.

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன், தேசிய பொருளதாரத்தையும் சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வது பிரதான காரணியாகும்.

கொவிட்-19 வைரஸ் பெருந்தொற்றுக்கு தடுப்பூசிகளை தவிர்த்து ஏனைய தீர்வு இதுவரையில் கண்டுப்பிடிக்கப்படவில்லை. ஆகவே எந்நிலையிலும் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தயார் நிலையில் இருத்தல் வேண்டும் அதற்கு தேசிய பொருளாதாரத்தை நிலையான தன்மையில் பேண வேண்டும்.

எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு பின்னரும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயணத்தடையினை தொடர்ந்து முன்னெடுக்குமாறு சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இவர்களின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும். 

பொது போக்குவரத்து சேவை தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு செலுத்துகிறது. ஆகவே பொது போக்குவரத்து சேவையினை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய 7 ஆம் திகதிக்கு பின்னர் தொடர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad