கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு பிரஜைகள் குழு கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, May 31, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு பிரஜைகள் குழு கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றம் பிராந்திய சுகாதார சேவையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது பிரஜைகள் குழு சார்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சின்னராசா ஜீவநாயகம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பை பெற்று பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அது மாவட்டத்துக்கு கிடைத்த மாபெரும் பிரசாதமாகும்.

இன்றைய சூழலில், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா அச்சுறுத்தலானது எமது மாவட்டத்திலும் பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆடைத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 60 க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் பணியாற்றுகின்ற பணியாளர்கள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கின்றவர்களாவர். குறிப்பாக சாந்தபுரம் கிராமம் முழுமையாக இராணுவ பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏனைய கிராமங்களிலும் இவ்வாறான நிலை ஏற்படாதவாறு இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடி நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பயண தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி மக்களின் நடமாட்டம் அதிகளவு காணப்படுகின்றது.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பினை மீறி அவர்களிற்கு வெவ்வேறு காரணங்களை கூறி மக்கள் நடமாடுகின்றனர்.

குறித்த நடமாட்டங்களை குறைத்து எங்களையும், எமது சமூகத்தையும் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வே்ணடும் எனவும் அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment