2021 ஐ.பி.எல். போட்டிகளில் பங்கெடுத்த அவுஸ்திரேலிய வீரர்களை இலங்கை அல்லது மாலைதீவுக்கு இடமாற்றம் செய்வதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உதவிகளை புரியும் என்று நிக் ஹாக்லி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற வீரர்கள், உறுப்பினர்களிடையே கொவிட்-19 நெருக்கடி அதிகரித்ததால் செவ்வாயன்று ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த முடிவு ஆஸ்திரேலிய மற்றும் பிற வெளிநாட்டு பங்கேற்பாளர்களை நாட்டை விட்டு வெளியேற வழிகளை ஏற்படுத்தியது.
இந்தியாவில் அன்றாடம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையினை கருத்திற்கொண்டு அவுஸ்திரேலியா இந்தியாவிலிருந்து வருவோருக்கு மே 15 ஆம் திகதி வரை தடையுத்தரவு விதித்துள்ளது.
தடையை மீறினால் சிறைத் தண்டனைக்கு உள்ளாவீர்கள் என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற அவுஸ்திரேலிய வீரர்கள் தாயகம் திரும்புவதற்கான அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக இந்தியாவுக்கு வெளியே காத்திருப்பார்கள் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் இடைக்கால தலைமை நிர்வாகி ஹாக்லி கூறினார்.
சிட்னியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஹாக்லி, நாங்கள் என்ன செய்யப்போகிறோம், பி.சி.சி.ஐ என்ன செய்யப்போகிறது, அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு ஒத்துழைத்துள்ளனர், முழு அவுஸ்திரேலிய வீரர்களையும் இந்தியாவுக்கு வெளியே இடமாற்றுவதற்கு உதவுகின்றார்கள்.
அதன்படி அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீரர்களை இலங்கை அல்லது மாலைதீவுக்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.
அதேநேரம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை வீட்டிற்கு அழைத்து வர ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதிபூண்டுள்ளது என்றும் ஹாக்லி மேலும் கூறினார்.
No comments:
Post a Comment