நா.தனுஜா
பாதாள உலகக்குழு செயற்பாடுகளில் முக்கியமாக இயங்கும் அரசியல்வாதிகள், வர்த்தகர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் தொடர்பான சாட்சியங்களை மறைப்பதற்காக பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் கொல்லப்படுகின்றனரா என்று முன்னிலை சோசலிஸக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, அண்மையில் பொலிஸ் பாதுகாப்பிலிருந்த பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த 'உரு ஜுவா' என்றழைக்கப்படும் மெலோன் மாபுல மற்றும் 'கொஸ்கொட தாரக' என்றழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உரு ஜுவா கொலை செய்யப்படலாம் என்று ஏற்கனவே அவருடைய தாயார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்திருக்கிறார். அதேபோன்று கொஸ்கொட தாரக கொலை செய்யப்படலாம் என்று அவரது சட்டத்தரணியினால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று இவ்விருவரும் கொல்லப்படலாம் என்று முன்னரேயே சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும் இச்சம்பவம் தொடர்பான விபரங்களை பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.
ஆரம்பத்தில் இதுபோன்ற சம்பவங்களின் போது, சந்தேகநபர் தம்மைத் தாக்க முற்பட்டதாகவும் தற்பாதுகாப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சந்தேகநபர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறுவதுண்டு. எனினும் இப்போது அந்தக் கதையையும் அவர்கள் கூறவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் ஒவ்வொரு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். பாதாள உலகக்குழு செயற்பாடுகள் மிகவும் மோசமானவை என்பதுடன் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவையாகும். ஆனால் சில சமயங்களில் சில தேவைகளுக்காக எதிரிகளை உருவாக்க வேண்டிய தேவை காணப்படுகின்றதல்லவா?
உதாரணத்திற்கு முன்னர் அனைத்து விடயங்களுக்கும் விடுதலைப் புலிகளே எதிரிகளாக சித்தரிக்கப்பட்டனர். அதன் பின்னர் புதிய எதிரியாக இஸ்லாமிய அடிப்படைவாதம் காண்பிக்கப்பட்டது. பின்னர் அரச சார்பற்ற அமைப்புக்களும் எதிரிகளாக்கப்பட்டன.
எனவே தற்போது அரசாங்கம் ஏனைய விடயங்களில் அடைந்திருக்கும் தோல்வியை மறைப்பதற்காகவே பாதாள உலகக்குழுக்கள் தொடர்பில் பேசு பொருளை உருவாக்குகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
அத்தோடு கொரோனா வைரஸ் பரவலினால் மக்கள் அச்சத்திற்குள்ளாகியிருக்கும் சந்தர்ப்பத்தில், சட்ட விரோதமான நடவடிக்கைகளை அரசாங்கம் சாதாரணமாக முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றதா என்ற கேள்வியும் ஏற்படுகின்றது.
இவ்வாறு பாதாளக்குழு உறுப்பினர்களைக் கொல்வதற்கு காரணம் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை முடிவிற்குக் கொண்டுவருவதா? அல்லது பாதாள உலகக்குழுக்களில் முக்கிய நபர்களைப் பாதுகாப்பதற்கா? என்று கேட்கின்றோம்.
பாதாள உலகக்குழு செயற்பாடுகளில் முக்கியமாக இயங்கும் அரசியல்வாதிகள், வர்த்தகர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் தொடர்பான சாட்சியங்களை மறைப்பதற்காக இத்தகைய கொலைகள் இடம்பெறுகின்றனவா?
இத்தகைய சம்பவங்கள் மூலம் பாதாள உலகக்குழுக்கள் இல்லாது போய், அதை விடவும் மோசமான பாதாள உலகக்குழு உருவாகும். அது அரசாங்கத்தின் ஆதரவையும் மக்களின் வரிப்பணத்தில் கொள்வனவு செய்த ஆயுதங்களையும் கொண்டிருக்கும். இத்தகைய புதிய பாதாளக்குழுக்கள் உருவாகுவதற்கு இடமளிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment