தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குதல், நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குதல், நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய பணிப்பு

கொவிட் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குதல் மற்றும் நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

குறுகிய காலத்தில் முடியுமானளவு தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென நாளாந்தம் ஒன்றுகூடும் கொவிட் குழுவுடன் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நோய் பரவுவதற்கு அதிகளவு வாய்ப்புள்ள மேல் மாகாணம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும். ரஷ்ய நாட்டின் உற்பத்தியான ஸ்புட்னிக் (Sputnik) தடுப்பூசியை வழங்கும் பணிகள் நேற்று (06) முதல் ஆரம்பமானது.

சீனாவிலிருந்து கிடைக்கப் பெற்ற 6 இலட்சம் “சைனோபாம்” தடுப்பூசிகள் சுகாதார அமைச்சிடம் உள்ளன. 51 நாடுகளில் 55 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு “சைனோபாம்” தடுப்பூசிகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளன.

அந்த நாடுகளின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி அந்த தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கு உள்ள வாய்ப்புகளை கண்டறியுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு “அஸ்ட்ரா செனிக்கா” தடுப்பூசியின் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

“அஸ்ட்ரா செனிக்கா” தடுப்பூசிகள் மேலதிகமாக உள்ள நாடுகளில் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான கலந்துரையாடல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களை தனிமைப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தல் மூலம் நோய் பரவுவதை தடுப்பதற்கு அதிகபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அனைத்து வைத்தியசாலைகளின் வசதிகளையும் தேவையான அளவில் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் பரவுவதை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment